புதிய குடியிருப்புகளில் வசிப்போருக்குச் சேவை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படும் மேம்பட்ட பேருந்துத் திட்டத்தின்கீழ் ஈசூனில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15ஆம் தேதி) சேவை எண் 861 இயங்கத் தொடங்கியது. இதை ஈசூன் நகரவாசிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இந்தப் புதிய மேம்படுத்தப்பட்ட பேருந்துச் சேவைத் திட்டத்துக்கு $900 மில்லியன் வரை செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.
இந்தப் புதிய சேவையை வரவேற்றவர்களில் செயலாக்க நிர்வாகி ரிட்சுவான் டானியன், சேவைத் துறை நிர்வாகியான அவரின் மனைவி அஷிகின் சுமினோ ஆகியோரும் அடங்குவர். இந்தத் தம்பதியர் ஈசூன் ஸ்ட்ரீட் 42ல் வசிக்கின்றனர்.
புதிய பேருந்துச் சேவை வடக்கு-தெற்கு ரயில் தடத்தை எளிதில் சென்றடைய முடிவதாக இந்தத் தம்பதியர் தெரிவித்தனர். இதற்கு முன்னர் தாங்கள் ஈசூன் ரயில் நிலையத்தையே நம்பியிருக்க வேண்டியதாகக் கூறினர். ஈசூன் ரயில் நிலையத்தில் நெரிசல் நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் இவர்கள் கருத்துரைத்தனர்.
செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்குச் சேவையாற்றத் தொடங்கிய எண் 861 பேருந்து சேவை, ஈசூன் கிழக்கு வழியாக கேன்பரா, காத்திப் ரயில் நிலையங்களை இணைப்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு பள்ளிகள், காத்திப் பலதுறை மருந்தகம் போன்றவற்றையும் சென்றடைய இப்பேருந்துச் சேவை ஏதுவாக உள்ளது.

