தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அங் மோ கியோவில் முதல் விளையாட்டு, நல்வாழ்வு விழா

2 mins read
பிரதமர் லாரன்ஸ் வோங், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு
a068113c-8d4c-495f-a41f-6b0f105dd059
அங் மோ கியோ குழுத்தொகுதி அக்டோபர் 5ஆம் தேதி ஏற்பாடு செய்த விளையாட்டு, நல்வாழ்வு விழாவில், 11 வயதுச் சிறுவன் நோலென் ஆங் துடுப்புப் பந்தாட்டம் விளையாடும் முறையைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்குக் கற்றுத்தந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

சிங்கப்பூர் சிறிய நாடு என்றபோதும் ஒருவர் அதன் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கு ஏதாவதொரு சிறப்பை உணர முடியும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

“அது கட்டடங்கள் பற்றிய பெருமை அன்று. மக்களைப் பற்றியது. தங்கள் குடியிருப்புப் பேட்டை, வீடு குறித்த அவர்களின் பெருமை, உரிமையுணர்வு பற்றியது,” என்று கூறிய அவர், அங் மோ கியோவிலும் அதை உணரமுடிவதாகக் குறிப்பிட்டார்.

அங் மோ கியோ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளும் கெபுன் பாரு, இயோ சூ காங் தனித்தொகுதிகளும் இணைந்து, குடியிருப்பாளர்களுக்காக ஏற்பாடு செய்த விளையாட்டு, நல்வாழ்வு விழாவில் கலந்துகொண்டபோது பிரதமர் இவ்வாறு கூறினார்.

துடிப்புடன் முதுமையடைதலையும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையும் ஊக்குவிக்கும் நோக்கில் அக்டோபர் 5ஆம் தேதி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அக்குழுத்தொகுதியின் குடியிருப்பாளர்களைச் சந்திப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய திரு வோங், முதிர்ச்சியடைந்த பேட்டையான அங் மோ கியோவில் முதியவர்கள் பலரும் துடிப்புடனும் உடல்நலத்துடனும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பிரதமராகப் பதவியேற்றது முதல் தொடர்ந்து வெவ்வேறு தொகுதி மக்களை அவர் சந்தித்து வருகிறார்.

தெம்பனிஸ், தஞ்சோங் பகார், பொங்கோல், வெஸ்ட் கோஸ்ட் ஆகியவற்றை அடுத்து அங் மோ கியோவிற்கு அவர் சென்றார்.

சிங்கப்பூர் புதிய கட்டத்தில் காலடி எடுத்துவைப்பதாகக் கூறிய திரு வோங், அனைவருக்கும் சேவையாற்றத் தமக்குக் கிடைத்த வாய்ப்பு குறித்துப் பெருமையடைவதாகச் சொன்னார்.

“சவால்கள் இருக்கும். இருந்தாலும் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளும் இருக்கும். உங்கள் அனைவருடன் இணைந்து பணியாற்றி சிங்கப்பூரை மேலும் ஒளிமயமான வருங்காலத்திற்கு இட்டுச்செல்ல ஆர்வமாயிருக்கிறேன்,” என்றார் பிரதமர்.

நிகழ்ச்சியில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துடுப்புப் பந்தாட்டமும் (Pickle ball) அவற்றில் அடங்கும்.

அவ்விளையாட்டுக்கான ஆர்வக்குழுவில் ஆக இளையவரான 11 வயது நோலென் ஆங் துடுப்புப் பந்தாட்டம் விளையாடும் முறையைப் பிரதமருக்குக் கற்றுத்தந்தார். சிறுவனிடம் கற்றதை உடனே முயன்று பார்த்தார் திரு வோங்.

அங் மோ கியோ குழுத்தொகுதியிலும் மற்ற இரண்டு தனித்தொகுதிகளிலும் வசிப்போரில் ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் 64 வயதைக் கடந்தவர்கள். இவர்களுக்காக 1,000க்கும் மேற்பட்ட ஆர்வக்குழுக்கள் செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டெரில் டேவிட் கூறினார். துடிப்புடன் முதுமையடைதல், ஆரோக்கிய வாழ்க்கைமுறை, தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பு போன்றவற்றை இக்குழுக்கள் ஊக்குவிக்கின்றன.

சில குழுக்கள் நன்னோக்கத்திற்காக விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன. ‘நன்கொடைக்கான படகோட்டம்’ எனும் அறநிதித் திரட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார். பங்கேற்பாளர்கள் ‘படகைச் செலுத்திய’ ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு கிலோ அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்