வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் தேவைக்கு ஏற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடுகளுக்கான விண்ணப்பம் ஜூன் 17ஆம் தேதி முதல் தொடங்கியது. அதில் பலர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் ‘ஸ்டான்டர்ட்’ நான்கு அறை வீடுகளும் பீஷான், புக்கிட் மேரா வட்டாரத்தில் கட்டப்படும் ‘பிரைம்’ ரக வீடுகளும் முதல்முறையாக வீடு வாங்குபவர்கள் இடையே பிரபலமாக உள்ளது.
புதன்கிழமை (ஜூன் 24) மாலை 5 மணி நிலவரப்படி முதல்முறையாக வீடு வாங்கும் பலர் உட்குரூவ் ஏக்கர்சில் விற்பனைக்கு வந்துள்ள 162 நான்கு அறை வீடுகளை வாங்க விரும்புகின்றனர்.
இந்த வீடுகள் வாங்க 3.5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்கான விண்ணப்பக் காலம் புதன்கிழமை காலை 11.59 மணியுடன் நிறைவடைந்தது.
‘ஸ்டாண்டர்ட்’ வகை வீடுகளை வாங்கிய பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்தே விற்க முடியும். அதேபோல் வீடு வாங்கப் பெறப்பட்ட மானியங்களையும் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.
“உட்குரூவ் ஏக்கர்சில் உள்ள வீடுகளை வாங்க அதிகம் பேர் விரும்புவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதன் அருகில் எந்த ஒரு ரயில் நிலையமும் மற்ற வசதிகளும் இல்லை,” என்று ‘ரியலையன்’ சொத்து நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.
“அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள ‘டூ பிளஸ்’ வீடுகளைக் குறைந்தது 10 ஆண்டு காலம் உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டும் அதனால் அவர்கள் உட்லண்ட்ஸ் பக்கம் திருப்பியுள்ளனர். மேலும், உட்லண்ட்ஸ் வீடுகளின் விலை அங் மோ கியோ வீடுகளைவிடக் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்,” என்று திருவாட்டி கிறிஸ்டின் கூறினார்.
“செம்பவாங்கில் உள்ள இரண்டு ‘ஸ்டாண்டர்ட்’ கட்டுமானத் திட்டங்களைக் காட்டிலும் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள கட்டுமானத் திட்டம் சற்று வசதி கொண்ட சூழலில் உருவாகுகிறது அதனால் மக்கள் உட்லண்ட்ஸ் வீடுகளுக்கு முன்னுரிமை தருகின்றனர்,” என்று ஹட்டன்ஸ் ஆசியா சொத்து நிறுவனத்தின் தரவு ஆய்வாளர் லீ சி டெக் கூறினார்.

