குறுக்குத்தீவு எம்ஆர்டி வழித்தடத்திற்கான முதல் ரயில் சிங்கப்பூர் வந்திறங்கியது

குறுக்குத்தீவு எம்ஆர்டி வழித்தடத்திற்கான முதல் ரயில் சிங்கப்பூர் வந்திறங்கியது

1 mins read
22d05ad6-faff-449a-a198-85932e81be39
சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் ரயில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளது. - படம்: நிலப்போக்குவரத்து ஆணையம்/ஃபேஸ்புக்

குறுக்குத்தீவு ரயில் வழித்தடத்தில் சேவையாற்றக்கூடிய முதல் ரயில் சிங்கப்பூர் வந்து சேர்ந்திருக்கிறது.

சீனாவின் குவிங்டாவ் நகரிலிருந்து வந்திருக்கும் அந்த ரயில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

50 கிலோமீட்டர் குறுக்குத்தீவு ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள் வரும் 2030ஆம் ஆண்டு முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட உள்ளன.

முழுமையாகத் திறக்கப்பட்ட உடன் சிங்கப்பூரின் கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு வட்டாரங்களை இணைக்கக்கூடிய ரயில் வழித்தடமாக அது இருக்கும்.

ஜூரோங் லேக் வட்டாரம், பொங்கோல் மின்னிலக்க வட்டாரம், சாங்கி வட்டாரம் ஆகிய முக்கியமான மையங்கள் அந்த வழித்தடத்தில் இடம்பெற்று இருக்கும் என்று ஆணையத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

குறுக்குத்தீவு வழித்தடம் சிங்கப்பூரின் எட்டாவது எம்ஆர்டி வழித்தடமாகும். நடப்பில் உள்ள வட்டப்பாதை வழித்தடத்தைத் தவிர எஞ்சிய எல்லா ஆறு எம்ஆர்டி வழித்தடங்களையும் இணைக்கக்கூடியதாக குறுக்குத்தீவு வழித்தடம் அமையும். அதன் எட்டு நிலையங்கள் ரயில் வழித்தட இணைப்பு நிலையங்களாகச் சேவையாற்றும்.

குறுக்குத்தீவு எம்ஆர்டி வழித்தட கட்டுமானத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2030ஆம் ஆண்டுவாக்கில் அந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், பாசிர் ரிஸ் முதல் பொங்கோல் வரையிலான நான்கு எம்ஆர்டி நிலையங்கள் முதலில் திறக்கப்படும்.

இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் 2025 ஜூலையில் தொடங்கின. 2032ஆம் ஆண்டுக்குள் அந்தப் பணிகளை நிறைவுசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்