கெத்தாம் தீவில் கரையோரத்தில், பயன்படுத்தப்படாத மீன் பண்ணைப் பொருள்கள், படகுகள், பெரிய மரப்பலகைகள் போன்றவை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபின் தீவிற்கு அருகில் உள்ளது கெத்தாம் தீவு.
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் கெத்தாம் தீவின் வனப்பகுதியில் பேரளவில் குப்பை கொட்டிக் கிடந்ததைக் காணமுடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
கடலில் அலைகள் குறைவாக இருக்கும்போது கரைக்கருகே நீரில் மூழ்கிய இத்தகைய மரச்சாமான்களையும் பார்க்க முடிந்ததாக அது குறிப்பிட்டது.
இவ்வாறு பொருள்கள் சிதறிக் கிடப்பது குறித்து அறிந்திருப்பதாகக் கூறிய சிங்கப்பூர் உணவு அமைப்பு அங்குத் துப்புரவுப் பணிகள் நடைபெறுவதாகக் கூறியது.
அவற்றைப் பிரித்து உரிய வகையில் அப்புறப்படுத்தும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அமைப்பின் பேச்சாளர் கூறினார்.
மீன் பண்ணைப் பொருள்களை முறையாக நிர்வகிப்பது தொடர்பில் அப்பண்ணைகளுடன் இணைந்து அமைப்பு பணியாற்றுவதாக அவர் சொன்னார்.
பண்ணைகளுக்குச் சொந்தமான பொருள்கள் நீரில் அடித்துச் செல்லப்படாமல் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருப்பதை அவை உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சிதறிக் கிடக்கும் மரச்சாமான்கள் சட்டவிரோதமாகக் குப்பை போட்டதாகக் கருதப்படுமா என்பது பற்றி சிங்கப்பூர் உணவு அமைப்பு கருத்துரைக்கவில்லை.
சிதறிய பொருள்கள் ‘சீ ஏஞ்சல் மரின்’ நிறுவனத்துக்குச் சொந்தமானவை என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
கடல் அலையால் இழுத்துச் செல்லப்படக்கூடிய பொருள்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாவண்ணம் அவற்றைக் கரையில் பிணைப்பதன் தொடர்பில் அந்நிறுவனம் உதவி வருவதாக அமைப்பு கூறியது.
நிறுவனத்துக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கெத்தாம் தீவின் தென்கரையோரப் பகுதியில் மரச்சாமான் குப்பைக்கூளம் காணப்படுகிறது.
கெத்தாம் தீவில் அமைந்துள்ள பிரைம் குரூப் இன்டர்நேஷனல் மீன் பண்ணையின் மூத்த இயக்குநரான டாக்டர் டே சூன் ஙீ, கடந்த சில மாதங்களாகத் தீவின் தென்பகுதியில் இத்தகைய மரச்சாமான் குப்பைகள் மெதுவாக அதிகரித்துவருவதாகக் கூறினார்.
கிழக்கு ஜோகூர் நீரிணையில் இருந்து பல மீன் பண்ணைகள் வேறு இடங்களுக்கு மாறுவது இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றார் அவர்.