தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலில் கவிழ்ந்த மீன்பிடிப் படகு; 30 பேர் மீட்பு

1 mins read
cb613c43-e3c0-4fc0-8690-902ed9559eb6
இந்தோனீசியாவில் பதிவு செய்யப்பட்ட படகான ஃபெசபிக் மெமரி II, சிங்கப்பூருக்குச் சொந்தமான பெட்ரா பிராங்காவிலிருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் கவிழ்ந்தது - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 20) காலை மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்தது.

கடலில் விழுந்த 30 பேர் மீட்கப்பட்டதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

மீட்புப் பணிகளைச் சிங்கப்பூர் ஒருங்கிணைத்தது.

இந்தோனீசியாவில் பதிவு செய்யப்பட்ட படகான ஃபெசபிக் மெமரி II, சிங்கப்பூருக்குச் சொந்தமான பெட்ரா பிராங்காவிலிருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் கவிழ்ந்தது.

இதுகுறித்து ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட கோஸ்கோ டெவலப்மென்ட் கொள்கலன் கப்பல் காலை 7.20 மணி அளவில் கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்குத் தகவல் தெரிவித்தது.

தேடல், மீட்புப் பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டன.

படகு கவிழ்ந்தது குறித்து அந்தக் கடற்பகுதியில் இருந்த கப்பல்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

மேலும், இந்தோனீசியாவின் தேசிய தேடல், மீட்பு ஆணையத்திடமும் மலேசியாவின் கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திடமும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.

கடலில் விழுந்தோரைக் காப்பாற்றுமாறு லைபிரியாவில் பதிவு செய்யப்பட்ட ஆன்ட்ரோஸ் ஸ்பிரிட் கப்பலிடம் சிங்கப்பூர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

கவிழ்ந்த படகைச் சேர்ந்த 30 பேரும் மீட்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்டவர்கள் இந்தோனீசியாவின் பாத்தாம் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்