பாத்தாமில் நடந்த சோதனை: போதைப் பொருள் தொடர்பில் ஐவர் கைது

பாத்தாமில் நடந்த சோதனை: போதைப் பொருள் தொடர்பில் ஐவர் கைது

2 mins read
259cdde2-955f-4f6b-9f8a-ea31ac000ac5
சிங்கப்பூரின் மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு இந்தோனீசிய அதிகாரிகளுடன் பாத்தாம் பொழுதுபோக்குக் கூடத்தில் போதைப் பொருள் சோதனையை மேற்கொண்டது. - படம்: மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு

சிங்கப்பூரின் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் உதவியுடன் பாத்தாமின் பொழுதுப்போக்குக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஐந்து இந்தோனீசியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனீசியத் தேசியப் போதைப் பொருள் அமைப்பு வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) வெளியிட்ட கூட்டறிக்கையில் நான்கு சிங்கப்பூரர்கள் உள்பட 100க்கும் அதிகமானோரிடம் சோதனைகள் நடத்தப்பட்டதாகச் சிங்கப்பூர் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சொன்னது.

வெளிநாடுகளில் போதைப் பொருளைப் பயன்படுத்தும் சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் பிடிக்க மத்திய போதைப் பொருள் பிரிவு இம்மாதம் 17ஆம் தேதி சோதனைகளை நடத்தியது.

அந்தச் சோதனை நடவடிக்கையில் இந்தோனீசிய காவல்துறை, இந்தோனீசிய தேசிய ஆயுதப் படை, குடிநுழைவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

எல்லைத் தாண்டிய போதைப் பொருள் நடவடிக்கைகளை முடக்கவும், போதைப் பொருள்களிலிருந்து சிங்கப்பூரர்களையும் இந்தோனீசியர்களையும் பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.

வெளிநாட்டிற்குச் சென்று போதைப் பொருளை உட்கொள்ளலாம் என்று நினைக்கும் போதைப் புழங்கிகளுக்கும் இந்தச் சோதனை நடவடிக்கை ஓர் எச்சரிக்கை என்றார் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் சோதனை நடவடிக்கைகளுக்கான துணை இயக்குநர், உதவி ஆணையர் ஏரன் டான்.

“போதைப் பொருளைத் தொடர்ந்து உட்கொள்வோருக்கு எந்த அடைக்கலமும் கிடையாது. குறிப்பாக பிற நாடுகளில் போதைப் பொருள் உட்கொண்டு அந்த நாட்டின் சட்டத்தை அவமதிப்போருக்கு இது ஓர் எச்சரிக்கை,” என்றார் அவர்.

போதைப் பொருளுக்கு எதிரான சட்டத்தின்கீழ் பிற நாடுகளில் உள்ள சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் போதைப் பொருளை உட்கொள்வது சட்ட விரோதம்.

அத்தகைய குற்றத்துக்காகப் பிடிபடுவோர் சிங்கப்பூரில் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்வர்.

குறிப்புச் சொற்கள்