‘ஆயுள்’ நிறைவை நெருங்கும் ஐந்து காசு நாணயங்கள்

‘ஆயுள்’ நிறைவை நெருங்கும் ஐந்து காசு நாணயங்கள்

2 mins read
ebb812f1-bdab-4b8b-9d80-41507c717e94
ஐந்து காசு சாணயம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கழிவறைக்குப் போகும்போதுகூட 10 அல்லது 20 காசு நாணயங்களைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

சிங்கப்பூரர்கள் சிலர் இதைச் சுட்டிக் காட்டுகின்றனர். பல வர்த்தகர்கள் ஐந்து காசு நாணயங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஐந்து காசு நாணயத்தின் பயன்பாடு அந்த அளவு குறைந்து வருகிறது.

ஐந்து காசு நாணயத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவு என்னவென்றும் பயன்பாட்டிலிருந்து ஐந்து காசுகளை விலக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்றும் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாட்லி ஃபாவ்ஸி கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த துணைப் பிரதமரும் சிங்கப்பூர் நாணய ஆணையத் தலைவருமான கான் கிம் யோங், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆணையம் புதிதாக ஐந்து காசு நாணயங்களை உற்பத்தி செய்யவில்லை என்று முதன்முறையாகத் தெரிவித்தார். மேலும், அந்த நாணயத்தை இனி உற்பத்தி செய்யும் திட்டம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், பொதுமக்களிடையே இருக்கும் தேவை காரணமாக ஐந்து காசு நாணயத்தை விநியோகிப்பதை நிறுத்தும் எண்ணம் சிங்கப்பூர் நாணய ஆணையத்துக்குக் கிடையாது என்று அவர் சொன்னார்.

பொருள்களின் விலையை வர்த்தகங்கள் தொடர்ந்து ஐந்து காசு அளவில்தான் அதிகரித்து வருகின்றன. மேலும், வீசப்படும் பைகளுக்குக் கடைகள் ஐந்து அல்லது 10 காசு கட்டணம் விதித்து வருகின்றன.

“ஐந்து காசு நாணயத்தைப் பயன்பாட்டிலிருந்து விலக்கினால் அது, சில்லறை வர்த்தகர்கள் விலைகளைத் தீர்மானிப்பதில் (rounding up) பாதிப்பை ஏற்படுத்தும், வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டிய கட்டணம் அதிகரிக்கும்,” என்றார் திரு கான்.

முன்னதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு காசு நாணயங்களை விநியோகிப்பதை நிறுத்திக்கொண்டது. அந்த நாணயம் அதிகம் பயன்படுத்தப்படாததால் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஐந்து காசு நாணயத்துக்கும் அதே நிலை வரும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய வல்லுநர்கள் கருத்துரைத்தனர்.

குறிப்புச் சொற்கள்