தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது விபத்து; ஐவர் காயம்

1 mins read
055d1caf-e2ed-46e4-9c0c-2c653cb210a0
தேசிய தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமையன்று (ஆக்ஸ்ட் 9) சீமெயில் ஈஸ்ட்பாயின்ட் கடைத்தொகுதியை ஒட்டி அமைந்துள்ள திறந்தவெளித் திடலில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீமெய்யில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) இடம்பெற்ற தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வின்போது மேடையின் பின்னால் வைக்கப்பட்டிருந்த திரை விழுந்து ஐவர் காயமுற்றனர்.

மேடை நடவடிக்கைகளின்போது அந்த ஐந்து குடியிருப்பாளர்களுக்கும் வெட்டு, சிராய்ப்பு போன்ற இலேசான காயங்கள் ஏற்பட்டதாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிக்கா டான் தெரிவித்துள்ளார்.

“விரைந்து செயல்பட்டு உடனடிக் கவனிப்பும் உதவியும் வழங்கியதற்காக சமூக அவசரகாலச் செயற்குழுவிற்கும் ஏற்பாட்டுக் குழுவிற்கும் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திருவாட்டி டான் பதிவிட்டுள்ளார்.

“நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது நம் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் குழுவினர் தொடர்பில் இருப்பர். சம்பவம் குறித்து விசாரித்து, மீண்டும் இதுபோல் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்வோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என அறியப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.

தேசிய தினத்தை முன்னிட்டு, திருவாட்டி டானின் சாங்கி சீமெய் தொகுதியில், ஈஸ்ட்பாயின்ட் கடைத்தொகுதியை ஒட்டி கிழக்கில் அமைந்துள்ள திறந்தவெளித் திடலில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 11 மணிவரை விளையாட்டு நடவடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்