இந்தோனீசியாவின் பாத்தாம் தீவுக்கு 2021ல் சட்டவிரோதமாக சென்று அங்கு தங்கியதற்காக சிங்கப்பூர் ஆடவர் ஒருவருக்கு ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டக்லஸ் நப்பித்துப்புலு, “பிரதிவாதியின் செயல்களை நியாயப்படுத்த முடியாது,” என்று கூறியதை உள்ளூர் ஊடகம் பாத்தாம்போஸ் மேற்கோள் காட்டியது.
நூர் ஃபைசல் ஷா எனும் அந்த 38 வயது ஆடவருக்கு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், ஃபைசல் நல்லபடியாக நடந்துகொண்டதையும் அவருக்குக் குழந்தை ஒன்று இருப்பதையும் நீதிபதி டக்லஸ் சுட்டினார்.
இந்தோனீசியாவை நேசிப்பதாகவும் இந்தோனீசியக் குடிமகனாக தாம் விரும்புவதாகவும் ஃபைசல் கூறினார். இந்தோனீசிய தேசியக் கீதத்தைப் பாடவும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் நீதிபதிகள் அவரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவரால் அவை இரண்டையும் செய்ய முடிந்தது.
அதைத் தொடர்ந்து, ஃபைசல் இந்தோனீசியக் குடிமகனாவதற்கு உதவுமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி டக்லஸ் கேட்டுக்கொண்டார்.
ஐந்து மாதச் சிறைத் தண்டனைக்கும் மேலாக, 25 மில்லியன் ரூப்பியா (S$2,100) அபராதம் செலுத்தும்படியும் ஃபைசலிடம் கூறப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தாவிட்டால், அதற்குப் பதிலாக மேலும் ஒருமாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
அதற்கு ஃபைசல், “ஆமாம், நான் ஏற்றுக்கொள்கிறேன்,” எனப் பதிலளித்தார்.
2021 ஜூலையில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள நீர்ப்பகுதியிலிருந்து படகில் புறப்பட்ட ஃபைசல், பத்துவம்பார் துறைமுகம் வழியாக பாத்தாம் தீவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக பாத்தாம்போஸ் செய்தி குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வாடகை வீடு ஒன்றில் தம் மனைவியுடன் ஃபைசல் வசிப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பாத்தாம் தீவில் இருந்த காலத்தில், ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு ஃபைசல் சென்றதாகக் கூறப்படுகிறது.