‘பிடிஓ’ வீடுகளில் குடியேறுவோர்க்கு ஐந்து அம்சங்களில் ஆதரவு

‘பிடிஓ’ வீடுகளில் குடியேறுவோர்க்கு ஐந்து அம்சங்களில் ஆதரவு

2 mins read
f5c2a67a-dda7-48fb-8ee5-9c90617cd8ff
புதிய குடியிருப்புகளில் குடியேறுவோர்க்கு ஆதரவளிக்கும் திட்டங்கள் குறித்து விளக்கிய தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு/யூடியூப்

புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில், கட்டி முடிக்கப்படும் முதல் புளோக்குகளில் குழந்தைப் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் தயார்நிலையில் உள்ள அம்மையங்கள் முதலில் குடியேறும் குடும்பங்கள் பயன்படுத்த ஏதுவாக அமையும் என்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் கூறியுள்ளார்.

சிறுபிள்ளைகளுடன் ‘பிடிஓ’ வீடுகளில் குடியேறுவோர்க்கு உதவ பாலர் பருவ மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார். குடியிருப்பாளர்கள் குடியேறிய ஆறு மாதங்களுக்குள் அந்நிலையங்கள் செயல்படத் திட்டமிடப்படும்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 4) அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய அவர், “கடந்த எட்டு மாதங்களில் அடித்தள அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி புதிய பிடிஓ வீடுகளில் குடியேறுவோர்க்கு ஆதரவு தேவைப்படும் ஐந்து முக்கிய அம்சங்களை அடையாளம் கண்டுள்ளோம்,” என்றார்.

போக்குவரத்து வசதியை அதிகரிக்க, பெரிய ‘பிடிஓ’ குடியிருப்புகளில் முதல் தொகுதிக் குடியிருப்பாளர்கள் சாவிகளைப் பெறும் நேரத்தில் குறைந்தது ஒரு பேருந்துச் சேவையை இயக்க நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து வீவக திட்டமிடும்.

அருகில் உள்ள வசதிகளை இணைக்கும் அப்பேருந்து சேவைகள், வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமையும்.

முதல் தொகுதி குடியிருப்பாளர்கள் நுழையும்போது கடைகளும் தயாராக இருக்க வழிவகுக்கப்படும். வெளிப்புற அமருமிடங்கள் முன்னரே கட்டப்படுவதன்மூலம், உணவங்காடி உரிமையாளர்களுக்குச் செலவு குறைவதுடன் அமருமிடங்களை அமைக்க தேவைப்படும் நேரமும் எட்டு மாதம் வரை குறையும்.

மேலும், குடியிருப்பாளர்கள் நுழையுமுன் கூரையுடன்கூடிய நடைபாதைகளும் அமைக்கப்படும். அவர்களின் பயன்பாடுகளுக்கேற்ப அவை தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

குடியேறுவோர்க்கு உதவும் வகையில் பெரிய பொருள்களை அப்புறப்படுத்த ஏதுவாக பெரிய குப்பைத் தொட்டிகள், கொள்கலன்களை அமைக்க தேசியச் சுற்றுப்புற வாரியம், நகர மன்றம் ஆகியவற்றுடன் வீவக பணியாற்றி வருகிறது.

மேலும், முறையற்ற வகையில் குப்பைகளை அப்புறப்படுத்துவோர்க்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளும் கடுமையாக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்