சிங்கப்பூரில் கனமழை பெய்ததில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) பிற்பகல் ஓஃபிர் சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
அவ்விடத்தில் பொதுமக்களுக்கு உதவ அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டதாகப் பிற்பகல் 2.20 மணி அளவில் பொதுப் பயனீட்டுக் கழகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
ஓஃபிர் சாலைக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பல்வேறு இடங்களில் வெள்ள அபாயம் உள்ளது என்றும் அவ்விடங்களைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்திருந்தது.
தஞ்சோங் பகார்/கிரேக் சாலை, அப்பர் ஹோக்கியன் ஸ்திரீட்/சவுத் பிரிட்ஜ் சாலை, ஜாலான் பூன் லே (என்டர்பிரைஸ் சாலையிலிருந்து இன்டர்நேஷனல் சாலை வரை) ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஓஃபிர் சாலையில் வெள்ளம் வடிந்துவிட்டதாகவும் அவ்விடம் போக்குவரத்துக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் பிற்பகல் 3 மணி அளவில் எக்ஸ் தளத்தில் கழகம் பதிவிட்டது.
நவம்பர் 16ஆம் தேதியன்று கனமழை பெய்ததை அடுத்து, புக்கிட் தீமா சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.