கடல் அலை உயர்வால் நவம்பர் 26-28 வரை திடீர் வெள்ள அபாயம்

கடல் அலை உயர்வால் நவம்பர் 26-28 வரை திடீர் வெள்ள அபாயம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Nov 2026 - 6:31 pm

2 mins read

நவம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை அலைகள் உயரக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மழையும் பெய்தால் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி, திங்கட்கிழமை (நவம்பர் 23) வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்தது.

கிறிஸ்துமஸ் காலகட்டத்திலும் வரும் ஜனவரி மாதப் பிற்பகுதியிலும் கடல் அலை 3.3 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரை உயரக்கூடும். இதனால், தாழ்வான கடலோரப் பகுதிகளில் வசிப்போர் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் கனமழையுடன் கடல் அலை உயர்வும் இணைந்து வெள்ள அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

வெள்ள அபாயம் அதிகம் உள்ள நாள்கள்: நவம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை.

டிசம்பர் 25 முதல் டிசம்பர் 28 வரை: நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

ஜனவரி 23 முதல் ஜனவரி 26 வரை: காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.

அலைகளின் உயரம் அதிகமாக இருக்கும் நேரங்களில், கடலுக்குச் செல்லும் கால்வாய்கள், வடிகால்களில் இருந்து நீர் வழிந்தோடுவதால் ஈஸ்ட் கோஸ்ட் பார்க் போன்ற தாழ்வான கடலோரப் பகுதிகளில் தற்காலிக வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று பியுபி கூறியது.

“அண்மை ஆண்டுகளில், கடல் அலைகளின் மட்டம் 3.3 மீட்டரைத் தாண்டும்போது, மழை பெய்யாத நேரங்களில்கூட இத்தகைய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைப் பார்க்கமுடிந்தது,“ என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

புலாவ் உபினிலும் அலைகள் உயரும்போது இத்தகைய ‘பகல்நேர வெள்ளப்பெருக்கு’ ஏற்படும் போக்கு உள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடுவதுடன், தாழ்வான பகுதிகளில் உள்ள சில கிராமப்புற வீடுகளையும் கடைகளையும் வெள்ளநீர் பாதிக்கிறது.

வானிலை நிலவரம், வெள்ள எச்சரிக்கைகள் குறித்த உடனடித் தகவல்களைப் பெற, வாகன ஓட்டுநர்களும் பயணிகளும் ‘மைஇஎன்வி’ கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு அல்லது டெலிகிராமில் பியுபி அமைப்பின் வெள்ள எச்சரிக்கைச் சேவையில் (@பியுபிஃபிளட்அலர்ட்ஸ்) இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்