சிங்கப்பூரின் சில பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், சனிக்கிழமை (நவப்மர் 16) புக்கிட் தீமா ரோட்டில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
எதிரில் உள்ள கால்வாய்களிலும் புக்கிட் தீமா கால்வாயிலும் நீர்நிலை அதிகரித்ததால், திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது.
“வெள்ளநீரிலிருந்து போக்குவரத்தைத் திசைமாற்ற, கழகம், விரைவு நடவடிக்கைக் குழுவைப் பணியில் அமர்த்தியது. திடீர் வெள்ளம் பிற்பகல் 3.30 மணிக்கு ஓய்ந்தது,” என்று கழகம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது.
முன்னதாக, சிங்கப்பூரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரித்திருந்தது.
அந்தப் பகுதிகளைத் தவிர்க்குமாறு அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
தெம்பனிஸ் விரைவுச்சாலை (பொங்கோல் வெஸ்ட் மேஞ்சாலை), நியோ பீ டெக் லேனுக்கும் பாசிர் பாஞ்சாங் ரோடுக்கும் இடையிலான சந்திப்பு, ஜாலான் பூன் லே (இண்டர்நேஷனல் ரோடுக்கு இட்டுச்செல்லும் என்டர்பிரைஸ் ரோடு), புக்கிட் தீமா ரோடு (பிளாக்மோர் டிரைவுக்கு இட்டுச்செல்லும் வில்பி ரோடு), சன்செட் டிரைவுக்கும் சன்செட் வேக்கும் இடையிலான சந்திப்பு, சன்செட் டிரைவுக்கும் சன்செட் டெரசுக்கும் இடையிலான சந்திப்பு, லோரோங் கிஸ்மிசுக்கும் டோ டக் ரைசுக்கும் இடையிலான சந்திப்பு, எங் கொங் பிளேஸ் (எங் கொங் கார்டனுக்கு இட்டுச்செல்லும் கிரீன்ரிட்ஜ் கிரெசன்ட்), கிராஞ்சி விரைவுச்சாலை இணைப்புச் சாலை, டன்னர்ன் ரோடு ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருந்ததாக கழகம் எச்சரித்தது.
நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில், பெரும்பாலான நாள்களில் தீவின் பல பகுதிகளில் மிதமான அளவிலிருந்து இடியுடன் கூடிய அளவுவரை மழை பெய்யக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலைச் சேவை தெரிவித்தது.