திடீர் வெள்ள அபாயம்: புக்கிட் தீமா, தங்ளின் பகுதிகளைத் தவிர்க்க அறிவுறுத்து

திடீர் வெள்ள அபாயம்: புக்கிட் தீமா, தங்ளின் பகுதிகளைத் தவிர்க்க அறிவுறுத்து

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Nov 2026 - 4:58 pm

1 mins read

திடீர் வெள்ள அபாயம் காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) பிற்பகலில் மத்திய சிங்கப்பூரின் சில பகுதிகளைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பிற்பகல் 3 மணியளவிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு புக்கிட் தீமாவில் உள்ள பால்மோரல் ரோடு, ஸ்டீவன்ஸ் ரோடு சந்திப்பைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட பதிவில் பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவுறுத்தியது.

ஏறத்தாழ 15 நிமிடங்களுக்குப் பிறகு, தங்ளின் ரோட்டில் கிரேஸ் அசெம்பிளிக்கு முன்பாக உள்ள பகுதிக்கும் புக்கிட் தீமா ரோடு அருகே உள்ள மெக்கன்சி ரோட்டிற்கும் செல்ல வேண்டாம் எனக் கூடுதல் எச்சரிக்கைகளை அது வெளியிட்டது.

நவம்பர் 26ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை எதிர்பார்க்கப்படும் கடல்மட்ட உயர்வு கனமழையுடன் இணைந்தால் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் எனத் திங்கட்கிழமை கழகம் எச்சரித்திருந்தது.

கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் சில நாள்களிலும் 2027 ஜனவரியிலும் 3.3 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரை கடல்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தாழ்வான கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்