நேப்பாளக் கிராமங்களை அடித்துச் சென்ற திடீர் வெள்ளம்

நேப்பாளக் கிராமங்களை அடித்துச் சென்ற திடீர் வெள்ளம்

2 mins read
ff4e807a-1920-4065-9aa8-21884bd9d9f1
நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

காத்மாண்டு: நேப்பாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்தனர். அந்தப் பகுதிகளில் உள்ள சாலைகளும் பாலங்களும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், வெள்ளம் அதிகமாக உள்ள சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராசுவா என்ற மலைப்பகுதிகளில் உள்ள சியாபுரு பெஸ்ஸி, திமுரே ஆகிய இடங்களில் வாழும் 50,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அதிகாரிகள், போட்டே கோ‌ஷி ஆற்றுக்கு அருகே வசிப்போரை அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்திவருகின்றனர்.

“கிராம உள்கட்டமைப்புத் திட்டத்துக்கான தளங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது,” என்று வட்டார நிர்வாகி நரேந்திர பரியார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

திடீர் வெள்ளத்தால் சாலைகளும் பாலங்களும் சேதமடைந்தன.
திடீர் வெள்ளத்தால் சாலைகளும் பாலங்களும் சேதமடைந்தன. - படம்: இபிஏ

நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், இதேபோல இதே ஆற்றில் கடந்த ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளம், பனிப்பாறை உருகியதால் ஏற்பட்டது என்று கண்டறியப்பட்டது.

நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளில் ஒன்று என நேப்பாள நீர்வள அமைச்சு சுட்டியது. அதன் காரணமாக அந்தப் பகுதிகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது.

கீழ்மட்டத்தில் உள்ள மக்களை மேல்மட்டத்திற்குக் கொண்டுசெல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் பலேந்திரா ‌‌‌ஷா கூறினார்.

திபேத்தில் உற்பத்தியாகும் போட்டே கோ‌ஷி ஆறு நேப்பாளத்தில் திரி‌‌ஷுலி ஆற்றில் கலந்து இந்தியாவுக்குள் கந்தாக் ஆறாக ஓடுகிறது.

கடந்த ஆண்டு போட்டே கோ‌ஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 9 பேர் மாண்டனர்; 24 பேரைக் காணவில்லை.

அது, நேப்பாளத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புப் பாலத்தையும் அடித்துச் சென்றதில் வணிகமும் போக்குவரத்தும் பல மாதங்களுக்கு நிலைக்குத்தின.

நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன.
நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்