சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக மணிலாவுக்குத் திருப்பிவிடப்பட்டது.
இன்று காலை (ஜனவரி 12) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாக நம்பப்படுகிறது. இதையடுத்து மணிலாவுக்கு விமானம் சென்றது.
விமானத்தில் 193 பயணிகளும் 14 விமானச் சிப்பந்திகளும் இருந்தனர். இந்த விமானம் 17 மணி நேரம் பயணம் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் விமான ஊழியர்களின் அனுமதிக்கப்பட்ட வேலை நேரம் முடிந்துவிட்டதால் இரவு முழுவதும் போயிங் 787-9 விமானம் மணிலாவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மணிலாவிலிருந்து சிங்கப்பூருக்கான விமானம் நாளை (ஜனவரி13) காலை 7.25 மணிக்குப் புறப்படும் என்று யுனைடெட் ஏர்லைன்ஸ் மின்னஞ்சல் வழியாக வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தது.
இதற்கிடையே பயணிகளுக்கு ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுக்கான பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
யுஏ1 விமானம் ஜனவரி 10ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து இரவு 11.13 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் ஜனவரி 11, பிற்பகல் 3.30 மணி) சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. அது, இன்று காலை 8.00 மணியளவில் ( ஜனவரி 12) சிங்கப்பூரில் தரையிறங்குவதாக இருந்தது.

