மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான இரண்டு விமானச் சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து துபாய்க்கு பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படவிருந்த SQ494 விமானம், இரவு 7.45 மணிக்குப் புறப்படவிருந்த SQ495 விமானம் ஆகியவற்றின் சேவை ரத்து செய்யப்பட்டன.
“நிலைமை சரியில்லாததால் சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான இதர விமானச் சேவையும் பாதிக்கப்படக்கூடும்,” என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், தடங்கலால் ஏற்பட்ட சிரமத்துக்காகப் பயணிகள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டது.
விமானச் சேவைகள் ரத்தானது பற்றி தெரிவிக்க பாதிக்கப்பட்ட பயணிகளைத் தொடர்புகொள்வதாகவும் நிறுவனம் சொன்னது.
விமானச் சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு விமானங்களில் மாறிக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்தபடாத பயணச்சீட்டின் முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும் சிங்கப்பூருக்கும் துபாய்க்குமான சேவை வழக்கம்போல தொடர்வதாக எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனம் சொன்னது.
ஈரானில் உள்ள டெஹ்ரான், பாக்தாத், ஈராக்கில் உள்ள பஸ்ரா ஆகிய இடங்களுக்குச் செல்லும் அனைத்து விமானச் சேவையை மட்டும் தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாக எமிரேட்ஸ் சொன்னது.
ஈராக்கிற்கும் ஈரானுக்கும் செல்வதற்கான பயண விண்ணப்பங்களை துபாய் இப்போதைக்கு ஏற்காது என்றும் அது கூறியது.