தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மிதக்கும் சிறைச்சாலையா? சிங்கப்பூர் சிறைத்துறை மறுப்பு

1 mins read
79cabc9a-3c1f-4265-a87c-a10a199aba4f
மிதக்கும் சிறைச்சாலை எனக் குறிப்பிட்டு, இணையத்தில் பகிரப்பட்ட படங்கள். - படங்கள்: இன்ஸ்டகிராம்/VISION.MOTIVEE, FINANCIAN_

உலகின் முதலாவது மிதக்கும் சிறைச்சாலை சிங்கப்பூரில் அண்மையில் திறக்கப்பட்டதாக வெளியான இணையச் செய்தியில் உண்மையில்லை என்று சிங்கப்பூர் சிறைத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

நிலப் பற்றாக்குறைக்கும் சிறையில் நிலவும் நெரிசல் பிரச்சினைக்கும் தீர்வுகாணும் வகையில், கடலோரத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் கடலுக்குள் மிதக்கும் சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்பட்டன.

அப்படி இன்ஸ்டகிராமில் வெளியான ஒரு பதிவில், “செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்பு, உயிரளவைப் (biometric) பாதுகாப்பு, இயந்திர மனிதச் சுற்றுக்காவல் போன்ற வசதிகளுடனும் வழக்கமான கம்பித் தடுப்புகள் இல்லாமல் மின்னிலக்கத் தடுப்புகளுடனும் அச்சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2,000 கைதிகள் வரை அங்கு அடைக்கலாம்,” என்று கூறப்பட்டிருந்தது.

ஜூலை 15ஆம் தேதி பகிரப்பட்ட அப்பதிவிற்குக் கிட்டத்தட்ட 9,000 பேர் விருப்பக்குறியிட்டுள்ளனர். அதற்கு இருநாள்களுக்குமுன் வெளியான இன்னொரு பதிவிற்கு 7,000க்கும் மேற்பட்டோர் விருப்பக்குறியிட்டுள்ளனர். அப்பதிவானது ‘எதிர்கால நகர்ப்புற சிறைவாசம்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இணையத்தில் பரவிவரும் அத்தகைய பதிவுகள் குறித்து தான் அறிந்துள்ளதாகச் சிங்கப்பூர் சிறைத்துறை தெரிவித்தது.

“அதில் உண்மையில்லை. அத்தகைய சிறைச்சாலை குறித்து நாங்கள் ஆலோசனை செய்யவோ திட்டமிடவோ இல்லை. அதற்கான தேவையும் இல்லை,” எனச் சிறைத்துறை விளக்கமளித்துள்ளது.

மேலும், “பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாமென்றும் அத்தகைய தகவல்களை நம்ப வேண்டாமென்றும் பொதுமக்களுக்கு வலியுறுத்துகிறோம். அதிகாரத்துவத் தகவல்களுக்குச் சிங்கப்பூர் சிறைத்துறையின் இணையத்தளத்தையும் அதன் சமூக ஊடகப் பக்கங்களையும் நாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் அது தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்