சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (மே 15) காலை பெய்த பெருமழையினால் மவுன்பேட்டன் வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, 15 நிமிடங்களில் அது வடிந்துவிட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) தெரிவித்தது.
அதற்பு முன்பாக, தேசிய தண்ணீர் முகவையான பியுபி, காலை 10.47 மணியளவில் வாகனவோட்டிகள் அப்பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது.
எம்பர் ரோட்டிலிருந்து தஞ்சோங் காத்தோங் சவுத் பகுதிகள் அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பிறகு, 11.03 மணிக்கான நிலவரப்படி வெள்ளம் வடிந்துவிட்டது என்று பியுபி குறிப்பிட்டது.
திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையை சிங்ப்பூரின் பல இடங்களுக்கு பியுபி அறிவித்தது. பொதுமக்கள் அந்த இடங்களைத் தவிர்க்கும்படி அது கேட்டுக்கொண்டது.
காலை 9.26 மணிமுதல் 10.31 மணிவரை, அப்பர் பயலேபார் ரோடு, கேலாங் ரோடு லோரோங் 1 சந்திப்பு, புக்கிட்தீமா ரோடு அருகே உள்ள மெக்கன்ஸீ ரோடு, மவுன்பேட்டன் ரோடு, ஜாலான் பொக்கொ செருனாய் ஆகிய பகுதிகளைத் தவிர்க்கவேண்டிய இடங்களாக பியுபி அடையாளம் காட்டியது.
எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தீவின் வடக்கு, கிழக்கு, மத்திய பகுதிகளில் காலை 10 மணிமுதல் 11.15 மணி வரை கனமழை எதிர்பார்க்கப்படுவதாக பியுபி பதிவிட்டுள்ளது.

