வியாழக்கிழமை (ஜூன் 11) காலை பெய்த பெருமழையைத் தொடர்ந்து, ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ஒரு பகுதியைத் தவிர்க்கும்படி வாகன ஓட்டுநர்களைப் பொதுப் பயனீட்டுக் கழகம் ஆலோசனை கூறியுள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ஜாலான் பூன் லே பகுதிக்கு (இன்டர்நேஷனல் ரோட்டிலிருந்து என்டர்பிரைஸ் ரோடு வரை) வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக, காலை 9.49 மணிக்கு வெளியிட்ட எக்ஸ் பதிவில் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாத முற்பாதியில், சிங்கப்பூரின் சில பகுதிகளில், சில நாள்கள் பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் முன்னுரைத்திருந்தனர்.
மேலும், சில நாள்களில் பின்னிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழையும், பலத்த காற்றும் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாதத்தின் முதல் பதினைந்து நாள்களுக்கான மொத்த மழைப்பொழிவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

