மே 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு போலி சமூக ஊடகக் கணக்குகள், அரசியல் கட்சி இணையத்தளங்கள் மூலம் மோசடிக்காரர்கள் சிங்கப்பூரர்களிடம் நன்கொடைகள் கேட்கக்கூடும் என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
மோசடிக்காரர்களின் அத்தகைய உத்தி குறித்து கவனமாக இருக்கும்படி அமைப்பு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிக்கையில் அறிவுறுத்தியது.
ஆள்மாறாட்டம் மூலம் போலியான, தவறான தகவல்களைப் பரப்பி வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த மோசடிக்காரர்கள் முற்படலாம் என்று இணையப் பாதுகாப்பு அமைப்பு சொன்னது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தனிப்பட்ட, அடுத்தவர்களை நம்பவைக்ககூடிய மோசடி மின்னஞ்சல்கள், செய்திகள், குரல் பதிவுகள் போன்றவற்றைத் தயாரிக்க முடியும் என்ற அமைப்பு, பெரும்பாலான பிரசார நடவடிக்கைகள் இணையம்வழி அதிகமாக இடம்பெறுவதைச் சுட்டியது.
வேட்பாளர்கள் சொல்லாததையும் செய்யாததையும் கட்டும் காணொளிகளை மோசடிக்காரர்கள் ‘டீப்ஃபேக்’ மூலம் உருவாக்கி அவர்களின் நன்மதிப்பையும் நற்பெயரையும் கெடுக்க முடியும் என்று அமைப்பு குறிப்பிட்டது.
இணைய மோசடிகளைக் களைய சிங்கப்பூரர்கள் தங்களுக்கு வரும் மின்னஞ்சல்களையும் குறுஞ்செய்திகளையும் கூடுதல் கவனத்துடன் அணுகும்படி அமைப்பு கேட்டுக்கொண்டது.
அத்தகைய நடவடிக்கைகள் குறித்து ‘ஸ்கேம்ஷீல்ட்’ செயலிமூலம் உடனடியாகப் புகாரளிக்கும்படி அது அறிவுறுத்தியது.

