ஆண்டிறுதி அமலாக்க நடவடிக்கைகளில் 1,771 பேரிடம் விசாரணை, 546 பேர் கைது

3 mins read
2b9455b0-77fc-4ba2-9f4e-ac7e0775928e
டிசம்பர் 20, 21ஆம் தேதிகளில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 14 பேர் கைது செய்யப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் நவம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதிவரை நடைபெற்ற அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து 1,771 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளின் தொடர்பில் விசாரிக்கப்படும் அவர்களில் 1,161 பேர் ஆண்கள்; 610 பேர் பெண்கள் என்று கூறப்பட்டது.

ஆண்டிறுதி, பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சிகளின் ஓர் அங்கமாக அந்த அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தீவெங்கிலும் நடைபெற்ற அமலாக்க நடவடிக்கைகளில் 15,900 பேரிடம் சோதனை நடத்தப்பட்டு அவர்களில் 546 பேர் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் 22ஆம் தேதி இரண்டு அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிளமெண்டி காவல்துறைப் பிரிவு, ஜூரோங்கில் உள்ள மூன்று உடற்பிடிப்பு நிலையங்களில் சோதனை நடத்தியது. மாதர் சாசனம், வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டம், குடிநுழைவுச் சட்டம் ஆகியவற்றின்கீழ் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜூரோங் காவல்துறைப் பிரிவினர் புக்கிட் பாத்தோக்கில் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாகக் குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஆண்கள் 9 பேருடன் மாது ஒருவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்களிடமிருந்து $10,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

நவம்பர் 27, 28ஆம் தேதிகளில் நடைபெற்ற அமலாக்க நடவடிக்கைகளில் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டம், சாலைப் போக்குவரத்துச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம் ஆகியவற்றின்கீழ் 19 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

டிசம்பர் முதல் வாரத்தில் சைனாடவுன், லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 196 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

டிசம்பர் 20 ஆம் தேதி இரவு, 21ஆம் தேதி அதிகாலையில் நடைபெற்ற சில அமலாக்க நடவடிக்கைகளில் தமிழ் முரசு உடன்சென்று கவனித்தது. டிசம்பர் 20ஆம் தேதி மெக்பர்சன், அப்பர் பாய லேபார் வட்டாரங்களில் அங் மோ கியோ காவல்துறைப் பிரிவும் சுகாதார அறிவியல் ஆணையமும் இணைந்து நடத்திய அமலாக்க நடவடிக்கைகளில் 43 வயது நபர் ஒருவர் மின்சிகரெட் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டிசம்பர் 20 ஆம் தேதி, மெக்பெர்சன் வட்டாரத்தில் உள்ள பொழுதுபோக்கு நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
டிசம்பர் 20 ஆம் தேதி, மெக்பெர்சன் வட்டாரத்தில் உள்ள பொழுதுபோக்கு நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. - படம்: லாவண்யா வீரராகவன்

டிசம்பர் 20, 21ஆம் தேதிகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 18 முதல் 36 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஏழு பேருக்கும் பெண் ஒருவருக்கும் மின்சிகரெட் வைத்திருந்த குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் ஏழு காவல்துறைப் பிரிவுகள், குற்றப் புலனாய்வுத் துறை, போக்குவரத்துக் காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் 4,500 பேர், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சுகாதார அறிவியல் ஆணையம், மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

போக்குவரத்து விதிமீறல்கள், மின்சிகரெட், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், சட்டவிரோதக் குடிநுழைவு ஆகியவற்றின் தொடர்பில் தீவெங்கிலும் 1,400 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“இந்நடவடிக்கைகள் சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் காவல்துறையின் உறுதிப்பாட்டைக் கோடிட்டுக் காட்டுகின்றன. இவை, சட்டங்களை மீறுவோர்மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன,” என்றார் காவல்துறைச் செயல்பாட்டுத் துறையின் இயக்குநரும் மூத்த துணைக் கண்காணிப்பாளருமான லியோன் சான்.

குறிப்புச் சொற்கள்