சிங்கப்பூர் - மலாயாவில் தமிழ்ப்பள்ளிகளில் பல தலைமுறையினர் பயின்றபோதும், சுதந்திர சிங்கப்பூரில் இத்தகைய பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த மெர்டேக்கா தலைமுறையினரின் சூழல் தனித்தன்மைமிக்கது.
தமிழை முதல்மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகவும் அந்த மாணவர்கள் பயின்றனர். வீட்டிலும் பள்ளியிலும் முழுமையாகத் தமிழ் பேசி வளர்ந்த அந்தச் சூழலில் சிங்கப்பூரில் ஆங்கிலத் திறனுக்கான தேவை மேலும் உணரப்பட்டது.
முன்னோடித் தலைமுறையினரையும் அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரையும் போல தமிழ்மொழியிலேயே ஊறியிருந்து, சக தமிழரை அண்டியிருந்து வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது.
1960களில் வளர்ந்த இந்தியர்கள் பலரும் ஆங்கிலப்பள்ளிகளில் பயின்றுவந்தனர். எனவே, தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆங்கிலத் திறன்களைக் கற்கவேண்டிய கடினச் சூழலுக்கு ஆளாயினர்.
தமிழையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்று இருமொழித் திறனை முழுமையாக வளர்த்துக்கொண்டவர்களில் பலர், மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த சிங்கப்பூர்த் தமிழ்ப்பள்ளி மாணவர்களே.
பண்பாட்டுச் செறிவுமிக்க சூழலில் கல்வி கற்ற மனநிறைவை இன்றளவும் உணர்வதாக சிராங்கூன் நார்த்தில் வசிக்கும் இந்தத் தம்பதியர் தெரிவித்தனர்.
ஜாலான் காயு கம்பத்துச் சூழலில் வளர்ந்த லட்சுமி சூரியகண்ணு, 67, இயோ சூ காங்கிலுள்ள கலைமகள் தமிழ்ப் பாடசாலையில் தொடக்க நிலை ஒன்றாம் மாணவியாகச் சேர்ந்த ஆண்டான 1965ல் சிங்கப்பூர் புதிதாகச் சுதந்திரம் அடைந்தது.
புதிய நாட்டின் தேசிய கீதம், கடவுள் வாழ்த்து உள்ளிட்ட பாடல்களுடன் பள்ளி நாளைத் தொடங்கிய நினைவுகள் இவரது மனத்தில் பசுமையாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“பொங்கல் போன்ற பண்டிகைகள் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டன. சரஸ்வதி படத்திற்குமுன் நாங்கள் வழிபாடு செய்த நினைவு இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
இராமகிருஷ்ண மடத்தின் மேற்பார்வையில் இருந்த அந்தப் பள்ளிக்கு, அதிக வசதி இல்லாத சூழலில் அன்று ஜாலான் காயுவில் இருந்த திருநெல்வேலிச் சங்கம் உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
“எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தப் பள்ளியில் ஓடுவதற்கான திடல் இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றாக ஓடக்கூடியவர்கள் பலர் கலைமகள் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அங்குத் திடல் இருந்ததும் ஒரு காரணம்,” என்று அவர் கூறினார்.
தொடக்கப்பள்ளியில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் செல்ல முடிந்த ஒரே தமிழ் உயர்நிலைப் பள்ளி, உமறுப்புலவர் உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. 1982ல் மூடப்பட்ட அந்தப் பள்ளி, பிற்காலத்தில் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையமாகத் திறக்கப்பட்டது.
‘‘மேக்ஸ்வெல் ரோட்டிலிருந்த உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்கு காலை ஐந்து மணிக்கு ஜாலான் காயுவிலிருந்து பேருந்து எடுத்தால்தான் என்னால் ஏழு மணியளவில் உமறுப்புலவர் பள்ளியை அடைய முடியும். பல இடங்கள் செல்லும் நீண்ட பாதையில் பேருந்து சென்றது,’’ என்று அவர் கூறினார்.
திருவாட்டி லட்சுமி, அங்குத் தம் வருங்கால கணவரான புவியரசன் தட்சணாமூர்த்தியைச் சந்தித்தார். “அன்று முதல் இன்று வரையிலும் நாங்கள் நண்பர்கள்தான்,” என்று அவர் சிரித்தபடி கூறினார்.
மனைவியைப் போல திரு புவியரசனும் தமிழ்த் தொடக்கப்பள்ளியில் பயின்றார். மலேசியாவில் கஜாங்கில் பிறந்த திரு புவியரசன், ஓராங் பசார் தோட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் பயின்று பின் தொடக்கநிலை ஐந்து முதல் சிங்கப்பூர் வந்து 1968ல் செம்பவாங் தமிழ்ச்சங்கப் பாடசாலையில் சேர்ந்து பயின்றார்.
அந்தப் பள்ளிக்கு மு.தங்கராஜு என்பவர் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்ததை திரு புவியரசன் நினைவுகூர்ந்தார். பின்னர் அவர், உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். திருவாட்டி லட்சுமியைப் போல திரு புவியரசனுக்கு உமறுப்புலவர் உயர்நிலைப் பள்ளி சற்று தொலைவில் இருந்தது.
தொடக்கப்பள்ளியில் எல்லாப் பாடங்களையும் தமிழில் படித்தாகக் கூறிய திரு புவியரசன், உயர்நிலைப் பள்ளியில் படித்திருந்தபோது தொழில்நுட்பப் பாடங்கள் சிலவற்றுக்காக நியூ டவுன் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்.
தொடக்கநிலை ஒன்று முதல் உயர்நிலை வரையில் தாம் மலாய் மொழியைப் பயின்றதையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர். “தேசிய மொழி என்பதால் அப்போது எல்லோருக்கும் அது கட்டாயப் பாடமாக இருந்தது. நான் படித்த தமிழ்மொழிப் பள்ளிகள் இரண்டிலுமே மலாய் படித்தேன்,” என்று அவர் கூறினார்.
தங்களுடன் படித்தவர்கள் பலர் தமிழ்த்துறையைத் தேர்ந்தெடுத்தபோதும் இவர்கள் மற்ற துறைகளில் பணியாற்றினர். திரு புவியரசன் கப்பல்துறையிலும் பின்னர் எஸ்எம்ஆர்டியிலும் பராமரிப்புத் தொழில்நுட்பராகப் பணியாற்றினார். சிங்டெல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு அதிகாரியாக திருவாட்டி லட்சுமி வேலை செய்தார்.
சுற்றியுள்ளவர்கள் அனைவரும் தமிழ் பேசிய அந்தப் பள்ளிச்சூழலில் பண்பாட்டு அறிவு, இலக்கியக் கல்வி ஆகியவற்றுடன் பாசமும் கலந்திருந்ததாக இருவரும் கூறினர்.
“பெற்றோர்களுக்கு ஒப்பான பாசம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடையே இருந்தது. தமிழ்ப்பள்ளிகளில் மனிதாபிமானம் அதிகமாக இருந்தது என்றே சொல்வேன்,” என்றார் திரு புவியரசன்.
சிங்கப்பூர் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்குத் தங்களைத் தகவமைத்துக்கொண்டதில் சிரமம் இருந்தாலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு அடைந்துள்ள வெற்றியைக் கண்டு அவர்கள் அகமகிழ்கின்றனர்.
“அன்று எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத, மலைக்க வைக்கும் அளவிற்கு இந்நாடு இப்போது வளர்ந்துள்ளது,” என்றார் திரு புவியரசன்.

