சிங்கப்பூர் உணவகச் சங்கம், அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கும் உணவு வகைகளை விரிவுபடுத்தும்படியும் ஒட்டுமொத்த கொள்முதலுக்கான சாத்தியத்தை ஆராயும்படியும் கேட்டுக்கொண்டுள்ளதாக பிசினெஸ் டைம்ஸ் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
உள்ளூர் உணவு, பான நிறுவனங்கள் போட்டித்தன்மையை அதிகரிக்கும் செலவினங்களையும் எதிர்கொள்வதால் சங்கம் அந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
உணவு, பானக் கடையின் செலவுகளில் உணவு விலை கிட்டத்தட்ட 30லிருந்து 40 விழுக்காடு என்று சங்கம் குறிப்பிட்டது. கடந்த பத்தாண்டுகளில் அது கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டது. வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட உணவு, பானக் கடையின் செலவினங்கள் மிகவும் அதிகமாக இருப்பதாக நிறுவனங்கள் கூறின.
நிறுவனங்கள் பெரும்பாலும் வாடகையைவிட உணவு விலை குறித்துத்தான் அதிகம் கவலைப்படுவதாகத் தெரிவித்தன. உணவு, பானக் கடையை நடத்தும் இடத்திற்கு வாடகையே ஆகப் பெரிய செலவு என்றபோதும் வழக்கமாக மூவாண்டுக்கு அந்த இடத்தைக் குத்தகைக்கு எடுத்துவிட முடியும். எனவே அதற்கான செலவில் பெரிய மாற்றம் இருக்காது என்று நிறுவனங்கள் குறிப்பிட்டன.
ஆனால் உணவு விலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும். குறிப்பாக சிறிய அல்லது தனிநபர் நடத்தும் நிறுவனங்கள் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டியிருக்கிறது. மாறாகப் பெரிய நிறுவனங்கள் ஓராண்டுக்குத் தேவையான விநியோகத்திற்கான விலையைப் பெரிய விநியோகஸ்தர்களிடம் நிர்ணயித்துவிட முடியும்.
மூலப் பொருள்களுக்கு 2023ல் நிறுவனங்கள் செலவு செய்தது 33 விழுக்காடு. ஊழியர்களுக்கான சம்பளம், வாடகை ஆகியவை பிற செலவினங்கள். எனவே, ஒட்டுமொத்த கொள்முதல் மூலப் பொருள்களின் விலையைச் சங்கம் கணிசமாகக் குறைக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல என்ற சங்கம், எந்தெந்த நிறுவனங்கள் ஒரே விநியோகஸ்தரிடமிருந்து பொருள்களை வாங்க விரும்புகின்றன என்பதைக் கண்டறியவேண்டும் என்று குறிப்பிட்டது.

