மெக்பர்சன் வட்டாரத்தில் உள்ள பாலர் பள்ளியொன்றில் நச்சுணவின் காரணமாக 17 பிள்ளைகளும் இரண்டு ஊழியர்களும் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
அவர்கள் இ-பிரிட்ஜ் பாலர் பள்ளியின் சர்க்கிட் ரோடு கிளையைச் சேர்ந்தவர்கள். செவ்வாய்க்கிழமையிலிருந்து (செப்டம்பர் 9) அவர்கள் வயிற்றுக் கோளாற்றால் அவதியுற்றனர்.
எவரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது. தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு, குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு, சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு தற்போது நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
பாலர் பள்ளியில் உள்ள பிள்ளைகளும் ஊழியர்களும் நலத்துடன் இருப்பதை உறுதிசெய்ய அதனை நடத்தும் தரப்புடனும் அமைப்பு பணியாற்றுகிறது.
நோய்த்தொற்றைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு பாலர் பள்ளிக்கு அமைப்பு நினைவூட்டியது.
பாலர் பள்ளிகளில் நல்ல உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை வலியுறுத்த உணவு அமைப்பு தன்னுடன் அணுக்கமாய்ப் பணியாற்றுவதாகவும் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு சொன்னது.