கோலாலம்பூரில் கார்டினியா பேக்கரிஸ் பொருள்களை உட்கொண்டதால் நச்சுணவுப் பாதிப்பு ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரிலுள்ள தங்களின் தயாரிப்பு, செயல்பாட்டுக் கட்டமைப்பு மலேசியப் பிரிவிலிருந்து முற்றிலும் தனித்து இயங்குவதாகக் கார்டினியா நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
சிங்கப்பூர்க் கார்டினியா நிறுவனத்தின் ரொட்டித் தயாரிப்பு நிலையம் 2026ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஜோகூர் பாருவுக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், சிங்கப்பூர்ச் சந்தைக்கான முக்கியப் பொருள்களைத் தயாரிக்கும் ஆலை, மலேசியக் கிளையிலிருந்து வேறுபட்ட தனி நிர்வாகம், உற்பத்தி, தரக்கட்டுப்பாட்டின்கீழ் இயங்குவதாக அது கூறியது.
மேலும், இரு பிரிவுகளும் தனித்தனியான கடுமையான உற்பத்தித் திட்டமிடல், செயல்பாட்டுக் கட்டுப்பாடு, தயாரிப்புத் தடமறியும் முறைகளைக் கொண்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கார்டினியா ஒரிஜினல் கிளாசிக் வெள்ளை ரொட்டி, டுவிக்கிஸ் சாக்-அ-லாட் ஆகியவை குறித்து விசாரணை நடப்பதாக மலேசியச் சுகாதார அமைச்சு நவம்பர் 8ஆம் தேதி கூறியது.
மேலும், ஆய்வுக்கூட முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் அந்நாட்டு உணவுச் சட்டம் 1983க்கு உட்பட்டு செயல்படுவதை உறுதிசெய்யக் கோலாலம்பூர் ஆலையில் சோதனைகள் நடத்தப்படும் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டது.
