சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் (எஃப்ஏஎஸ்) பொதுச் செயலாளராக ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி வகித்த யாசின் புஹாரி (படம்) அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து புஹாரி விலகுவார்.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் உயர் பொறுப்புகளில் பொதுச் செயலாளர் பதவியும் ஒன்று. 46 வயதான திரு புஹாரி, 2017ஆம் ஆண்டு அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புஹாரியின் குடும்பம் மலேசியாவில் உள்ளது. “ சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தில் பணியாற்றியது மிகப்பெரிய கெளரவம். குடும்பத்தைப் பிரிந்து ஏழு ஆண்டுகளாக வாழ்ந்து வருவது சிரமமான ஒன்று. அதனால் இந்தக் கடினமான முடிவை எடுத்துள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார்.

