காற்பந்து விளையாட வேண்டும் என்றால் ஓரளவாவது உடற் தகுதி வேண்டும் என்பது பலரால் நம்பப்படும் கருத்தாக உள்ளது.
அதிக உடல் எடை கொண்டவர்களுக்குக் காற்பந்து ஒத்துவராது என்றும் கூறப்படுகிறது.
இதை மறுக்கும் விதமாக உடல் எடை விகிதம் (BMI) 30க்கு மேல் இருப்பவர்களுக்காக மட்டும் ஒரு காற்பந்து விளையாட்டுத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
விளையாட்டுமூலம் உடல் எடையைக் குறைக்கும் விதமாகவும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் இந்தக் காற்பந்துத் தொடரை நடத்துவதாக டி2டி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் (D2D Sports) தெரிவித்தது.
வித்தியாசமான சில விதிமுறைகளை விளையாட்டிற்குள் புகுத்திக் காற்பந்துமீதும் உடல் எடை குறைப்புமீதும் காதலை உருவாக்குகிறோம் என்றார் டி2டி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ரஸ்விந்தர் சிங், 41.
பொதுவாக ஒரு விளையாட்டுத் தொடர் நான்கு மாதங்கள் நடக்கும் அதில் கிட்டத்தட்ட 10 அணிகள் விளையாடும். ஒவ்வொரு அணியும் 18 ஆட்டங்கள் விளையாடும்.
ஓர் அணியில் 12 வீரர்கள் இருப்பார்கள். அவர்களில் 5 பேர் விளையாடுவார்கள். 34 நிமிடங்கள் ஆட்டம் நடக்கும். வீரர்கள் வேகமாகவும் நிதானமாகவும் விளையாடுவதால் அணியில் உள்ள அனைவரும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றார் ரஸ்விந்தர்.
தொடரைச் சுவாரஸ்யமாக மாற்றும் நோக்கில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் அணி வீரர்களின் எடை கணக்கிடப்படும்.
தொடர்புடைய செய்திகள்
முதல் ஆட்டத்திற்கும் இரண்டாம் ஆட்டத்திற்கும் அணியின் மொத்த எடை குறைந்திருந்தால் அவர்களுக்கு ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் எடை குறைப்புக்கு ஏற்றவாறு புள்ளிகள் வழங்கப்படும்.
அதேபோல் அணியின் மொத்த எடை முந்தைய ஆட்டத்தைவிட அதிகமாக இருந்தால் கோல்கள் குறைக்கப்படும்.
விளையாட்டு வீரர்கள் பலருக்குப் போதிய உடலுறுதி இல்லாததால் பாதுகாப்பாக ஆட்டங்கள் நடக்கும்விதமாக அவசர உதவியாளர் ஒருவரும் ஆடுகளத்தில் இருப்பார் என்றார் ரஸ்விந்தர்.
“வார இறுதியில் நடக்கும் ஓர் ஆட்டத்திற்காக வாரம் முழுவதும் அணியில் உள்ள வீரர்கள் ஒற்றுமையாக இருந்து உடல் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம்,” என்றார் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயது ஆமீர் ஹம்சா.
கடந்த ஆண்டு இத்தொடரில் கலந்துகொண்ட ஹம்சா 115 கிலோ கிராம் எடையிலிருந்து தற்போது 90 கிலோகிராம் எடைக்குக் குறைந்துள்ளார்.
“இதுபோன்ற விளையாட்டுத் தொடர் என்னைப்போல் சற்று உடல்பருமன் உள்ளவர்களுக்கு நம்பிக்கை தருகிறது. இங்கு விளையாடும் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில் இருப்பதால் விளையாடும்போது மகிழ்ச்சியும் ஏற்படுகிறது,” என்றார் மென்பொருள் பொறியாளர் லோக்கேஷ்,32.
தற்போது திரு லோகேஷ் தனது மூன்றாவது தொடரில் விளையாடுகிறார்.
கப்பல்துறையில் பணியாற்றும் 35 வயது ஜோயல், “சிறு வயது முதலே காற்பந்துமீது ஆர்வம் உண்டு, நன்றாகவும் விளையாடுவேன், ஆனால் வேலைக்குச் சென்றபிறகு உடல் எடை கூடியது முன்னைப் போல் விளையாடமுடியவில்லை. இத்தொடரில் இணைந்தது மூலம் 10 கிலோ கிராம் எடை குறைந்தது, மீண்டும் சிறப்பாக விளையாடவும் வாய்ப்பு கிடைத்தது,” என்றார் அவர்.
ஆண்டுக்கு மூன்று முறை உடல் குறைப்பை மையமாகக் கொண்டு தொடர்களை நடத்துவதாக ரஸ்விந்தர் கூறினார்.
இத்தொடரில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த தொடர்களில் விளையாட வருவது மகிழ்ச்சி தருவதாகவும் அவர் கூறினார்.

