மலேசியா, புருணை, இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பாடாங்கிற்கு வந்தனர்

பாடாங்கிற்கு சிறப்பு சேர்த்த வெளிநாட்டுப் பிரமுகர்கள்

2 mins read
9f42e3aa-f0e0-42d7-8133-e541b1ddd0a4
(நடுவரிசை, இடமிருந்து) மலேசியத் துணைப் பிரதமரும் நகர்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சருமான ஸாஹிட் ஹமிடி, இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, புருணை மன்னர் ஹசனல் போல்கியா, ஜோகூரின் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், அவருடைய துணைவி கலீடா பஸ்டமம் ஆகியோர் பாடாங் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பிற்கு இவ்வாண்டு மேலும் சிறப்பு சேர்த்தனர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த முக்கியப் பிரமுகர்கள்.

மூன்று நாடுகளிலிருந்து நான்கு முக்கியப் பிரமுகர்கள் பாடாங்கில் நடைபெற்ற சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) கலந்துகொண்டனர். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அழைப்பை ஏற்று அவர்கள் இங்கு வந்தனர்.

புருணை மன்னர் ஹசனல் போல்கியா, இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், அவருடைய துணைவி கலீடா பஸ்டமம், மலேசியத் துணைப் பிரதமரும் நகர்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சருமான ஸாஹிட் ஹமிடி ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

திரு ஹமிடி, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் சார்பில் கொண்டாட்டத்திற்கு வந்தார்.

சிங்கப்பூர் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் சிங்கப்பூர் தலைவர்களுக்கு இடையே முக்கியப் பிரமுகர்களுக்கான பகுதியில் அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொருவருக்கும் பலத்த கைத்தட்டலும் உற்சாக வரவேற்பையும் பாடாங்கில் கூடியிருந்தோர் அளித்தனர்.

“சிங்கப்பூரின் மைல்கல் கொண்டாட்டத்தில் நெருங்கிய அண்டை நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதில் சிங்கப்பூர் பெருமிதம் கொள்கிறது. அவர்களின் வருகை, பொதுவான புவிசார், வரலாற்றுப் பந்தங்களை வலுப்படுத்துவதுடன் இருநாட்டு நட்பின் உறுதியை வெளிப்படுத்துகிறது,” என்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, வெளிநாட்டுத் தலைவர்கள் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

2019ஆம் ஆண்டு இந்தோனீசிய முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோ, மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, புருணை மன்னர் போல்கியா ஆகியோர் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

மலேசியாவின் திரு ஹமிடியும் ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமும் கொண்டாட்டத்துக்கு வந்திருப்பது, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய இருதரப்பு உறவைப் பறைசாற்றுகிறது.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே அரசதந்திர உறவு வலுப்படுத்தப்பட்டு இவ்வாண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைவதும் கொண்டாட்டத்தை மெருகேற்றுகின்றன.

குறிப்புச் சொற்கள்