தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு அறிவுரையை ஏற்க முடியாது: உள்துறை அமைச்சு

2 mins read
22f99286-0461-4ce4-9aa1-40fd85e7fada
உள்துறை அமைச்சின் தலைமையகம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த மே மாதம் மூன்றாம் தேதி நடந்த இவ்வாண்டுப் பொதுத் தேர்தலை முன்னிட்டு எந்தத் தரப்புக்கு வாக்களிக்கவேண்டும் என்று சிங்கப்பூரர்களின் மனதை மாற்றும் முயற்சியில் மலேசியக் கட்சி ஒன்றின் தலைவர்கள் ஈடுபட்டது தெளிவாகத் தெரிகிறது என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உள்துறை அமைச்சு எடுத்துரைத்துள்ளது.

வியாழக்கிழமை (அக்டோபர் 16) உள்துறை அமைச்சு இதனைக் குறிப்பிட்டது.

மலேசியாவின் பாஸ் கட்சி சிங்கப்பூரின் உள்நாட்டு அரசியல் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தரப்பு என்று அதன் தலைமைச் செயலாளர் டாக்கியுதின் ஹசான் கடந்த புதன்கிழமை (அக்டோபர் 15) கூறியிருந்தார். அவரின் நிலைப்பாட்டை உள்துறை அமைச்சு அறிக்கை மூலம் மறுத்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பாஸ் குறிப்பிட்டிருந்தது, கடந்த ஏப்ரல் மாதம் இருந்த அதன் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டிருந்ததாக உள்துறை அமைச்சு சுட்டியது. சிங்கப்பூர் பொதுத் தேர்தலை முன்னிட்டு தங்கள் கட்சித் தலைவர்கள் இருவர் மக்கள் செயல் கட்சி (மசெக), பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களைப் பற்றி வெளியிட்ட கருத்துகளுக்கும் தங்களின் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி பாஸ் அறிக்கையில் வெளியிட்டது.

முன்னதாக ஏப்ரல் 24ஆம் தேதி பாஸ் கட்சியின் தேசியப் பொருளாளர் இஸ்கந்தர் சமாட், பாட்டாளிக் கட்சியின் ஃபைசல் மனாப்பிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தார். அதே நாளில் சிலாங்கூர் மாநிலத்துக்கான பாஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் முகம்மது ஓமர், மசெகவின் மலாய் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்ப முடியாது என்று கூறிய சமூக ஊடகப் பதிவை மறுபதிவிட்டிருந்தார்.

அவ்விருவரின் கருத்துகளும் தனிப்பட்ட கருத்துகள் என்றும் அவை தங்களின் அதிகாரபூர்வ கொள்கையையோ அரசியல் கட்சி என்ற முறையிலான தங்கள் நிலைப்பாட்டையோ குறிக்கவில்லை என்று பாஸ் ஏப்ரல் 28ஆம் தேதி தெரிவித்திருந்ததை உள்துறை அமைச்சு சுட்டிக்காட்டியது. மேலும், இஸ்லாமியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள மலேசிய கட்சியான பாஸ், சிங்கப்பூரின் முக்கிய அக்கறைகளைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

“இன, சமய அடிப்படையில் மட்டுமின்றி பொதுவாகவே யாருக்கு வாக்களிப்பது என்ற அறிவுரையை சிங்கப்பூரர்களுக்கு அளிக்க எந்த வெளிநாட்டுத் தரப்புக்கோ தனிநபருக்கோ உரிமை கிடையாது. அது பிரிவினையை உண்டாக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்,” என்று அமைச்சு எடுத்துரைத்தது.

குறிப்புச் சொற்கள்