வெளிநாட்டினர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தேர்தல் இணைய விளம்பரங்களைச் சிங்கப்பூரர்களின் பார்வையிலிருந்து நீக்கும்படி தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், ‘மெட்டா’ தளத்திற்கு நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மலேசியாவின் பாஸ் எனப்படும் பார்ட்டி இஸ்லாம் செ-மலேசியா கட்சியைச் சேர்ந்த இஸ்கந்தர் அப்துல் சமது, ஸாய் நல் என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு கொண்டுள்ள ஸுல்ஃபிகர் முகமது ஷரிஃப், பாஸ் சிலாங்கூர் இளையரணித் தலைவர் முகமது ஸுக்ரி ஓமார் ஆகியோரது பதிவுகளுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியின் அல்லது வேட்பாளரின் வெற்றி வாய்ப்புகளுக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ தயாரிக்கப்படும் படைப்புகளைத் தேர்தல் விளம்பரங்களாக நாடாளுமன்றத் தேர்தல் சட்டம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வெளிநாட்டுப் பதிவுகள், சிங்கப்பூரர்களைக் குறிவைப்பதாகப் பதிவுகளின் நீக்கம் குறித்து உள்துறை அமைச்சும் தேர்தல் துறையும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிடுகிறது.
தற்போது இந்தப் பதிவுகளைச் சிங்கப்பூரில் உள்ளவர்கள் காண முடியாது. பாஸ் செய்தி மடலில் இடம்பெற்ற இரண்டு கட்டுரைகளையும் உள்துறை அமைச்சும் தேர்தல் துறையும் குறிப்பிட்டன.
பாஸ் கட்சியின் தேசியப் பொருளாளர் இஸ்கந்தர் அப்துல் சமது, பொதுத் தேர்தலில் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வெளிப்படுத்தியதைக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
இரண்டாமவரான ஸுல்ஃபிகர், சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தினரின் நலனைப் பிரதிபலிக்க மலாய்-முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தவறிவிட்டதாகத் தன் பதிவில் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம்களின் கருத்துகளைப் பிரதிபலிக்காத இன்னொரு மலாய் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சமூகத்தினருக்குத் தேவையில்லை என்று அவர், தன் பதிவில் எழுதியிருப்பதாகவும் கூட்டறிக்கை குறிப்பிட்டது.,
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு இணையத்தில் தனது ஆதரவை வெளிப்படுத்தி அதனைப் புகழ்ந்ததன் தொடர்பில் ஸுல்ஃபிகர், 2016ல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இவரது செய்கைகள், குறைந்தது மேலும் இரண்டு சிங்கப்பூரர்களை பயங்கரவாதச் சித்தாந்தத்தைத் தழுவச் செய்திருப்பதாகக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
அத்துடன், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான சமயச் சார்பற்ற ஜனநாயக அரசை நிராகரித்து ஷாரியா சட்டத்தால் நிர்வகிக்கப்படும் இஸ்லாமிய அரசை ஆதரிக்கும்படியும் முஸ்லிம்களை ஸுல்ஃபிகர் கேட்டுக்கொண்டார். தேவைப்பட்டால் இந்தக் குறிக்கோளுக்காக வன்முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் நம்பினார்.
சிங்கப்பூர்க் குடிமக்களுக்கென உரித்தான நம் உள்நாட்டு அரசியலில் இந்தப் பதிவுகள் தலையிடுவதாகக் கூட்டறிக்கை குறிப்பிட்டுள்ளது.
“அத்துடன் இன, சமய அடிப்படையில் வாக்களிக்கும்படி சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கின்றன. இவைபோன்ற இதர சமூக ஊடகப் பதிவுகளுக்கும் இந்தப் பதிவுகள் வித்திட்டுள்ளன. நமது நாட்டின் ஆணிவேராக உள்ள பல இன, பல சமய நல்லிணக்கத்தை முறிக்கக்கூடிய ஆற்றல் இத்தகைய பதிவுகளுக்கு உள்ளன,” என்றது அறிக்கை.
கடந்த சில நாள்களில் ஃபேஸ்புக், ரெட்டிட், இன்ஸ்டகிராம், டிரெட்ஸ் ஆகிய தளங்களில் அரசியலும் சமயமும் பிணைத்து எழுதப்பட்ட பதிவுகள் வெளிவந்தன. இவற்றில் நூர் டிரோஸ் எழுதிய சில பதிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிங்கப்பூரிலுள்ள அரசியல் கட்சிகளுக்கான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்திருப்பதாக நூர் டிரோஸின், தம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார். பாட்டாளிக் கட்சி மட்டும்தான் தம் கேள்விக்குப் பதிலளித்ததாகவும் நூர் டிரோஸ் கூறியுள்ளார்.
பின்னர், ஓரின ஈர்ப்பைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் போக்கை நிராகரிக்கும்படியான முஸ்லிம் சமூகத்தினரிடையே பரவலாக வலுக்கும் கோரிக்கையைப் பாட்டாளிக் கட்சி ஏற்காவிட்டால் கட்சிக்கு வாக்களிக்காமல் வேட்பாளருக்கே வாக்களிக்கும்படி ஊக்குவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், மலாய்-முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தவறியதாக நூர் டிரோஸ் குறிப்பிட்டார்.
வலுவான இஸ்லாமிய சமூகத்திற்காகப் போராடுவதற்கு பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர் பைசல் மனாப்பை ஆதரிக்கும்படி தெம்பனிஸ் வட்டாரவாசிகளுக்கு மற்றொருவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவு ஒன்றைய குவீன்காரட் என்ற இணைய வாசி ரெட்டிட் தளத்தில் பகிர்ந்தார்.
அரசியலும் சமயமும் கலக்கப்படக்கூடாது என்று வலியுறுத்திய அந்தக் கூட்டறிக்கை, சிங்கப்பூர் மதச்சார்பற்ற நாடு என்பதையும் சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டங்கள் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் சரிசமமாகச் சேவையாற்றும் என்பதையும் குறிப்பிட்டது.
“அரசியலுக்குள் சமயத்தைக் கொண்டுவருவது சமூக ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்கும் கேடு விளைவிக்கும். இன, சமய அடிப்படையிலான அரசியலைக் கொண்டுள்ள மற்ற நாடுகளில் இவற்றைக் காண்கிறோம்,” என்றது அறிக்கை.
பொதுக்கொள்கையில் சில நேரங்களில் சமய அக்கறைகள் இருக்கும் என்பதை அறிவதாகக் குறிப்பிட்ட உள்துறை அமைச்சு, சமயக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று கூறியது.