சீனக் கோயில் வெளியே வெளிநாட்டு ஆடவர் கைது

2 mins read
8a24cf4d-f17f-4574-9382-3ef6c75fca78
குவான் இம் தோங் ஹூட் சோ ஆலயத்துக்கு வெளியே கைது செய்யப்பட்ட ஆடவர். - படம்: மதர்‌ஷிப்

பூகிஸ் வட்டாரத்தில் இருக்கும் வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள பிரபல சீனக் கோயிலுக்கு வெளியே மெல்லிழைத்தாள் (tissue) விற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்டார். குவான் இம் தோங் ஹூட் சோ (Kwan Im Thong Hood Cho) ஆலயத்துக்கு வெளியே அந்த ஆடவர் மெல்லிழைத்தாள் விற்றுக்கொண்டிருந்தார். கைதான ஆடவரின் வாய்க்குக்கீழ் உள்ள முகத்தின் பகுதியில் கையளவில் கட்டி இருந்ததை ஷின் மின் ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் பார்த்ததாக மதர்‌ஷிப் தெரிவித்துள்ளது.

ஆடவரின் ஒரு கால், மற்றொன்றைவிட குள்ளமாக இருந்ததையும் அவர் ஊன்றுகோலின் உதவியுடன் நடமாடியதையும் அந்தச் செய்தியாளர் கண்டிருக்கிறார். ஆடவரின் உடற்குறைபாடுகளைக் கண்ட வழிப்போக்கர்கள் அவரிடமிருந்து மெல்லிழைத்தாள்களைப் பெற்றுக்கொள்ளாமலேயே ரொக்கம் வழங்கி வந்தனர். அதனால் 10 நிமிடங்களில் அவர் 50 வெள்ளிக்கும் மேல் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி நண்பகலில் வழிப்போக்கர் ஒருவர் அந்த ஆடவரைக் கண்டதாக ‌ஷின் மின் தெரிவித்தது. அந்நேரத்தில் சாலையோரத்தில் உட்கார்ந்திருந்த ஆடவரிடம் வழிப்போக்கர்கள் பலர் பணம் தந்துகொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

ஆடவர் ஒரு வெளிநாட்டவர் என்று தான் நம்பியதாக தகவல் தந்த வழிப்போக்கர் குறிப்பிட்டார். குவான் இம் தோங் ஹூட் சோ ஆலயத்துக்கு வெளியே வெளிநாட்டவர் பலர் பிச்சை எடுத்ததை அந்த வழிப்போக்கர் கண்டிருப்பது அதற்குக் காரணம். கைதான ஆடவரை வழிப்போக்கர் அதற்கு முன் பார்த்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதனால் ஒருவேளை அந்த ஆடவர் பிச்சை எடுப்பதற்காக சிங்கப்பூருக்கு வந்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வழிப்போக்கர் காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார். அதேவேளை, ஆடவர் உதவி தேவைப்படும் உள்ளூர்வாசியாக இருந்தால் அவர் உழைத்து சம்பாதிப்பதற்கு இடையூறு விளைவிக்கவேண்டாம் என்றும் அந்த வழிப்போக்கர், காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மெல்லிழைத்தாள் விற்ற ஆடவர் குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வர தடை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் என்றும் அவர் கைது செய்யப்பட்டதற்கு அதுவே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்