உலக மோதல்களுக்கிடையே பல இன சமூகமான சிங்கப்பூரில் ஒழுங்கமைப்பைப் பேணுவதற்கு சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கைகள், உள்நாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் குடியரசைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் முக்கியக் கவனம் செலுத்தும் அதே வேளையில், நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை சிங்கப்பூரர்களுக்கு விளக்க ‘நூற்றுக்கணக்கான அமர்வுகளையும்’ டாக்டர் விவியன் நடத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்திலும் அவரது அமைச்சின் கொள்கைகள் குறித்து அதிகமான மன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். “அதாவது, வெளியுறவுக் கொள்கை இப்போது உள்நாட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் அவர் விளக்கினார்.
உலகம் பிரச்சினைகள் நிறைந்ததாக மாறும்போது, “நாட்டின் அரசதந்திரம் உள்நாட்டில் அதிக கவனம் செலுத்துகிறது,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் பல இன, பல சமய அமைப்பு காரணமாக, உலகில் நெருக்கடிகள் அல்லது மோதல்கள் வெடிக்கும்போது, அவற்றை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது சிங்கப்பூரில் மிகவும் எளிதானது. மற்ற இடங்களில் நடக்கும் போர்கள், மோதல்கள் சார்ந்து, இங்குள்ள வெவ்வேறு குழுக்களின் உணர்வுநிலைகள் கூடியோ, குறைந்தோ மாறுபட்டு இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், உள்நாட்டில் ஒழுங்கமைப்பைப் பெற்றிருப்பது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்று அக்டோபர் முதல் தேதியுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்த டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், அரசியல் அனுபவங்கள், உலகச் சூழல், தமது வாழ்க்கை உள்ளிட்டவை பற்றி நீண்ட நேர்காணலை வழங்கினார்.
சிங்கப்பூரில் நீண்டகாலம் வெளியுறவு அமைச்சர் பொறுப்பை வகித்தவர்களில் ஒருவர் எனும் சிறப்புக்குரியவர் டாக்டர் விவியன், தமக்கு அளிக்கப்பட்ட இந்தப் பொறுப்பை கௌரவமாகவும் சிறப்பான வாய்ப்பாகவும் குறிப்பிட்டார். பேராசிரியர் எஸ்.ஜயகுமார் 1994 முதல் 2004 வரை 10 ஆண்டுகள் வெளியுறவு அமைச்சராக இருந்த மற்றொருவர். சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது முதல் 1980 வரை நாட்டின் வெளிப்புற உறவுகளை வழிநடத்தி, தனது அழியாத முத்திரையைப் பதித்தவர் எஸ்.ராஜரத்னம்.
முன்னாள் கண் மருத்துவரான 64 வயது டாக்டர் விவியன், சுற்றுப்புறம், நீர்வளம்; சமூக மேம்பாடு, இளையர், விளையாட்டு ஆகிய அமைச்சுகளிலும் பொறுப்பு வகித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
காஸா போர், சிங்கப்பூரில் மிகவும் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றானது. இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக சிங்கப்பூர் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியவர்கள் உட்பட, வெவ்வேறு இனங்கள், சமயங்கள், வயதினர்க்கிடையே விவாதங்கள் எழுந்தன.
காஸா போர் குறித்த சிங்கப்பூரின் நிலைப்பாடானது, ஒற்றுமையைப் பேணுவது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, அனைத்துலகச் சட்டங்களுக்குக் கீழ்படிவது ஆகிய மூன்று தேசிய நலன்களின் அடிப்படையிலானது என்றார் டாக்டர் விவியன்.
2001ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சி அறிமுகப்படுத்திய ‘சூப்பர் ஏழு’ பேரில் ஒருவரான டாக்டர் விவியன் அரசியலில் பேச்சாற்றல், தொடர்பாற்றலுக்குப் பெயர் பெற்றவர்.
பெரிய சக்திகளால் விதிகள் மாற்றி எழுதப்படும் உலகில், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள், தங்களுக்கான இடம் மிகவும் சிறியது என்பதை உணரலாம்.
‘இது வல்லவர் வாக்கே சரியானது’ என்ற சூழ்நிலையைப் பற்றியது மட்டுமல்ல என்ற அவர், சிங்கப்பூர் தொடர்ந்து உலகிற்கு ஏற்புடையதாக இருக்குமா, குறிப்பாக, அண்டை நாடுகளுடன் வளர்ந்து வரும் வேளையில், சிங்கப்பூர் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்று சிலர் கவலைப்படுகின்றனர் என்பதையும் சுட்டினார்.
“அது கடினமானதுதான். எனினும், ஒரு மேம்பட்ட உற்பத்தி மையமாகவும் உலகளாவிய முதலீட்டாளராகவும் சிங்கப்பூர் வளர்ச்சி பெற்றுள்ளது. சிங்கப்பூர் சில அம்சங்களில் தன் பலத்தை வளர்த்துக்கொண்டிருப்பதால் உலக அரங்கில் சிங்கப்பூரின் கருத்துக்கும் ஒரு சிறு இடமுள்ளது,” என்றார் அவர்.
“மேலும், சிங்கப்பூர் தனித்துச் செயல்படவில்லை,” என்ற அவர், ஆசியான், சிறிய நாடுகள் மன்றம் மற்றும் பிற பலதரப்பு கட்டமைப்புகளைக் குறிப்பிட்டார்.
தேசிய நலன்களின் அடிப்படையிலான கணிக்கக்கூடிய வெளியுறவுக் கொள்கை மீது சிங்கப்பூர் கவனம் செலுத்துகிறது, அமெரிக்கா, சீனா உட்பட அனைத்து நாடுகளையும் சமமாக நடத்துகிறது என அவர் கூறினார்.
டாக்டர் விவியன் ஒரு தாத்தாவும் கூட. அவரது மூத்த மூன்று பிள்ளைகளுக்கும் ஏழு பிள்ளைகள் உள்ளனர். 19 வயதாகும் கடைசி மகன் தேசிய சேவை ஆற்றுகிறார்.
அதிக நாள்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதால், குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியாததுடன், தம் ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி மக்களுக்கு போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. அதனால் தமது கைப்பேசி எண்ணைத் தொகுதி மக்களிடம் பகிர்ந்துள்ளார்.

