புதுப்பிப்புப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர் ஒருவர்க்கு $1.06 மில்லியன் வழங்கும்படி வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு ஆதரவு வழங்கும் ஓர் அறநிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆதரவு, பயிற்சிக்கான வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் சங்கம் (ஃபாஸ்ட்) எனும் அந்த அறநிறுவனம், இல்லப் பணிப்பெண்களுக்குத் திறன் பயிற்சிகளையும் சமூக ஆதரவையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், அதற்கு எதிராக இ-டெக் பில்டிங் சர்விசஸ் எனும் நிறுவனம் வழக்கு தொடுத்தது.
அந்த வழக்கானது யூனோஸ் அருகே, 3, சின் செங் அவென்யூவில் செயல்படும் ஃபாஸ்ட் அறநிறுவனத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு இ-டெக் நிறுவனம் மேற்கொண்ட புதுப்பிப்புப் பணிகள் தொடர்பானது.
முன்னைய தெலுக் குராவ் உயர்நிலைப் பள்ளி செயல்பட்ட அந்த இடத்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் நில ஆணையத்திடமிருந்து குத்தகைக்குப் பெற ஃபாஸ்ட் எண்ணியிருந்தது. அவ்விடத்தில் இல்லப் பணிப்பெண்களுக்குச் சேவை வழங்கும் ஒரு நிலையத்தைக் கட்ட அது திட்டமிட்டது.
அந்நிலையம் 2022 நவம்பரில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்டது.
அதன் மறுசீரமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பில் ஃபாஸ்ட், இ-டெக் இடையே சட்டபூர்வ உடன்பாடு எட்டப்படவில்லை. எனினும், 2020 மார்ச்சில் இ-டெக் அங்குப் பணிகளைத் தொடங்கியது.
ஏழு மாதகாலம் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது வெளிநாட்டு ஊழியர்களைத் தங்க வைப்பதற்காக அக்கட்டடம் பயன்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும், இ-டெக் மேற்கொண்ட பணிகளுக்கான தொகையை வழங்க ஃபாஸ்ட் ஒப்புக்கொண்டது. ஆனால், எவ்வளவு வழங்குவது என்பதில்தான் பிரச்சினை ஏற்பட்டது.
கட்டுமான நிறுவனத்தின் பணிகள்; லாபம், வருகைப்பதிவு மற்றும் திட்ட மேலாண்மைக் கட்டணம்; கட்டுமான நிறுவனம் சாராத பணிகள் என்ற மூன்று கூறுகளின் அடிப்படையில் இ-டெக் நிறுவனம் தனது கோரிக்கைகளை முன்வைத்தது.
கட்டுமான நிறுவனப் பணிகளுக்காக மட்டும் அந்நிறுவனம் $798,643 கோரிய நிலையில், $376,645 மட்டுமே வழங்க ஃபாஸ்ட் தயாராக இருந்தது.
இ-டெக் மேற்கொண்டதாகக் கூறும் பணிகளுக்குப் போதிய ஆவணச் சான்றுகள் இல்லை என ஃபாஸ்ட் வாதிட்டது.
தீ பாதுகாப்புச் சேவைகள் தொடர்பிலும் அவ்விரு நிறுவனங்களுக்கு இடையே பிரச்சினை எழுந்தது. அதன் தொடர்பிலான கோரிக்கைகளை இ-டெக் முன்வைத்த முறையானது மனநிறைவளிப்பதாக இல்லை என்று நீதிபதி கிறிஸ்டஃபர் டான் குறிப்பிட்டார்.
போதிய சான்றுகள் இல்லாததால் இ-டெக் நிறுவனத்தின் பல்வேறு கோரிக்கைகளை அவர் ஏற்க மறுத்தார்.

