துவாஸ் கப்பல் பட்டறையில் உலோகத் துண்டு தலையில் விழுந்து பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்விபத்து பிப்ரவரி 26ஆம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் நேர்ந்தது.
துவாஸ் சௌத்தில் சீட்ரியம் நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கில் சரக்கு மின்தூக்கி ஒன்றைப் பழுதுபார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இத்துயரச் சம்பவம் நேர்ந்தது.
தன்வீர் ஹசன் கான், 44, என்ற இந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே மாண்டுபோனதை துணை மருத்துவப் படையினர் உறுதிப்படுத்தியதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
80, துவாஸ் சௌத் பொலிவார்ட் என்ற முகவரியிலிருந்து உதவி கோரி அன்றைய நாள் பிற்பகல் 4.55 மணிக்கு அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பிற்பகல் 4.50 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு சென்று பார்த்தபோது, தன்வீர் சுயநினைவின்றி கிடந்ததைக் கண்டதாகக் காவல்துறை கூறியது.
உலோகத் துண்டு தாக்கியதில் அவரது மண்டையோட்டிலும் மூளையிலும் காயமேற்பட்டது என்பது அவரது இறப்புச் சான்றிதழ் மூலம் தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
கைலெட் புரோஜெக்ட் (எஸ்) என்ற நிறுவனத்தில் தன்வீர் வேலை செய்து வந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் அதே நிறுவனத்திற்காக வேலைசெய்து வந்த தன்வீருக்கு மனைவி, பத்து வயதில் மகள், நான்கு மாதத்தில் மகன் இருப்பதாக இங்கு வேலை செய்துவரும் அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
அவரது இறப்பில் சூது ஏதும் இருப்பதாகச் சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரித்து வருகிறது.

