தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்னொருவரின் விரலைக் கடித்துத் துண்டாக்கிய வெளிநாட்டு ஊழியருக்கு 10 மாதச் சிறை

2 mins read
e13f8749-e77e-4329-a870-e0c184ca54de
படம்: - பிக்சபே

அகழ்பொறி இயக்குபவராக வேலை செய்துவந்த தங்கராசு ரெங்கசாமி, குடிபோதையில் இன்னொரு வெளிநாட்டு ஊழியருடன் கைகலப்பில் ஈடுபட்டு, அவரது இடதுகை ஆட்காட்டி விரலின் முன்பகுதியைக் கடித்துத் துண்டாக்கினார்.

இந்தக் குற்றத்தை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட 40 வயது தங்கராசுக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மின்பொறியியல் தொழில்நுட்பரான 50 வயது திரு நாகூரன் பாலசுப்ரமணியத்தின் கடிபட்ட விரல்பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை.

சம்பவம் நடந்தபோது, இந்தியக் குடிமக்களான இவ்விரு ஊழியர்களும் காக்கி புக்கிட்டில் வெவ்வேறு தங்குவிடுதிகளில் வசித்திருந்தனர்.

ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 10 மணியளவில், திரு நாகூரனும் கட்டுமான ஊழியரான 33 வயது ராமமூர்த்தி ஆனந்தராஜும் மதுபானம் பருகிக் கொண்டிருந்தனர். அவர்களின் சுற்றுவட்டாரத்தில் மற்ற பல வெளிநாட்டு ஊழியர்களும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட ஐந்து மீட்டர் தொலைவில் அமர்ந்திருந்த தங்கராசு, சத்தமாகக் கத்தத் தொடங்கினார். திரு ராமமூர்த்தி அவரிடம் சத்தத்தைக் குறைக்கச் சொன்னார். உடனே தங்கராசு தனது வலது கையை ஓங்கியபடி அவரை நோக்கிச் சென்றார். திரு ராமமூர்த்தி அவரது கன்னத்தில் அறைந்தார். இதனால் இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. திரு நாகூரன் இவர்களைப் பிரிக்க முயன்றார்.

அந்தக் கைகலப்பில் திரு நாகூரனின் இடதுகை ஆட்காட்டி விரல் தங்கராசின் வாய்க்குள் சிக்கிக் கொண்டது. அவர் விரலை விடாமல் பலமாகக் கடித்தார். திரு ராமமூர்த்தி எவ்வளவோ முயற்சி செய்தும், தங்கராசு கடியை விடவில்லை.

முடிவில் திரு நாகூரனின் கை விடுபட்டபோது, விரலில் இரத்தம் கசிவதைக் கண்டார். விரலை நீரில் கழுவியபோது, முன்பகுதியைக் காணவில்லை. அவர் உடனே காவல்துறையிடம் தெரிவித்தபின், சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு 14 நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்