குடும்பத்தின் சிறப்பான எதிர்காலத்திற்காகத் தமது 23வது வயதில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார் கந்தசாமி ரகுபதி, 50.
தற்போது பல மாதங்களாகச் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களில் அவரும் ஒருவர்.
விவிஆர் பிளான்ட் இன்ஜினியரிங், எஸ்கே இண்டஸ்ட்ரீஸ், கேபிஏ இன்ஜினியரிங் ஆகிய மூன்று நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாதது குறித்து, அவற்றின் இயக்குநரான ராமு பழனி வேலுவிடம் மனிதவள அமைச்சு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மாதம் $1,600 சம்பாதித்து வந்த கந்தசாமிக்குக் கடந்த மூன்று மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை.
அவரது மூத்த மகள், பள்ளியில் பயிலும் இளைய மகள் ஆகியோரின் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் வேளையில், மறைந்த மனைவியின் நினைவுகளுடன் கந்தசாமி தவித்து வருகிறார்.
இந்தியாவில் இருக்கும் குடும்பத்திற்கு மாதம் $1,000 அனுப்பிய நிலையில், தற்போது தமது வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பணம் அனுப்பும் சூழல் உருவாகி உள்ளது என மிகவும் வேதனையுடன் அவர் பகிர்ந்தார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேசியத் தொழிற்சங்க காங்கிரசும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையமும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.
ஜூன் 30ஆம் தேதி, செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் இவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையத்தில் உறுப்பினர்களாக இருப்போருக்கு $100 ரொக்கமும் $100 மதிப்புள்ள ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளன.
மேலும், பொதுமக்கள் இணையம் வாயிலாக நிதி திரட்டி பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவி வருகின்றனர்.
மற்றொரு ஊழியரான 41 வயது ஜெயசங்கர் வினோத்குமார், இந்தியாவில் இருக்கும் தமது குடும்பத்தின் நிதி தேவையைச் சமாளிக்க உறவினர்களிடம் $20,000 வரை கடன்பட்டுள்ளார்.
விரைவில், நல்ல வேலை கிடைத்துத் தமது குடும்பத்தின் நிதி நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையுடன் அவர் காத்திருக்கிறார்.

