சிங்கப்பூரின் அத்தியாவசியச் சேவைத்துறையின் நடைமுறைகளைப் புரிந்துகொள்ளும் விதமாக, ஆளெடுப்பில் நீக்குப்போக்கு, கூடுதலான மேற்பார்வை தேவைப்படுவதாக, நீடித்த நிலைத்தன்மைத் துறை வர்த்தகர் சக்திவேலன் நடராஜா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மிகப் பரந்த துறையான சேவைத் துறையை மேலும் பல பிரிவுகளாக வகுக்கவும், வெளிநாட்டு ஊழியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் திரு சக்திவேலன் பரிந்துரைக்கிறார்.
தொடக்கத்தில் தந்தையின் துப்புரவுச் சேவை நிறுவனத்தில் சிரமங்களுக்கு இடையே பணியாற்றிய திரு சக்திவேலன், தமது உழைப்பில் ‘என்ஆர்டி டிரேடிங் அண்ட் இன்ஜினியரிங்’ (NRT Trading and Engineering) என்ற நிறுவனத்தை 2011ஆம் ஆண்டில் தொடங்கினார்.
படிப்படியான சம்பள உயர்வு முறை (PWM), அதிகரித்து வரும் போட்டி ஆகியவற்றால் ஏற்படும் சவால்களைச் சிறப்பாகச் சமாளிக்க, அவர் தமது தொழிலை ஒரு முதன்மை ஒப்பந்தக்காரர் நிறுவனமாக மாற்றியமைத்தார்.
குறைந்த விலைக்குக் குத்தகை கோரும் முதன்மை ஒப்பந்தக்காரர்களால், ஒரு துணை ஒப்பந்தக்காரராகத் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய லாப வரம்பு பெரும்பாலும் பாதிக்கப்படுவதை உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
துப்புரவுத் தேவைகளுக்கு ஈடுகொடுப்பதில் சவால்
“எனவே, எனது தொழிலின் செயல்பாடுகளை என் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதோடு, சொந்த வர்த்தகப் பெயரை (Brand) முதலிலிருந்து கட்டமைக்கவும் முடிவு செய்தேன்,” என்று அவர் கூறினார்.
உள்ளூர் ஊழியரணியுடன் வெளிநாட்டு ஊழியரணி நல்ல முறையில் கைகோக்கலாம் என்பது இவரது நிலைப்பாடு.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக நிர்வாகத்திற்குத் தேவைப்படும் அதிக நேர வேலைக்கு ஈடுகொடுக்க, 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட ஊழியர்கள் திணறுவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“எனவே, உள்ளூர் ஊழியர்களுக்கு ஆதரவு தரும் வகையில், குறிப்பிட்ட சில துறைகளுக்கான வெளிநாட்டு ஊழியர் வரம்பு தளர்த்தப்படுவது நல்லது,” என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கானத் தீர்வை பல நேரங்களில் அவர்களது சம்பளத்தைவிட அதிகமாக இருப்பதாகக் கூறிய திரு சக்திவேலன், இந்தச் செலவுகளைத் தாங்க இயலாமல் உள்ளூர் நிறுவனங்கள் தொழிலைவிட்டு வெளியேறாமல் இருக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் நோக்கில் முதலீட்டாளர்கள் சிலர், துப்புரவுத் துறைக்குள் நுழைகின்றனர்.
லாபம் ஈட்டுவது இவர்களின் முக்கிய குறிக்கோளாக இல்லாததால், மிகக் குறைந்த விலைக்குக் குத்தகை (Under-quoting) கேட்கின்றனர். ஒப்பந்தக் குழுக்கள் இத்தகைய செயல்களை அடையாளம் காண்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று திரு சக்திவேலன் கூறினார்.
புத்தாக்கக் கட்டமைப்பை எளிமைப்படுத்தலாம்
புத்தாக்கத்திற்கான கட்டமைப்பை மேலும் எளிமைப்படுத்த வரவுசெலவுத் திட்டம் துணைபுரிவது சிறப்பாக இருக்கும் என்றும் திரு சக்திவேலன் கூறினார்.
சுற்றுப்புற நலனை ஆதரிக்க விரும்பும் உள்ளூர் நிறுவனங்கள், நடைமுறை சவால்களை எதிர்நோக்குகின்றன. இதற்காக அரசாங்கம் வெளிநாட்டில் செயல்படுத்தப்படும் நிலைத்தன்மைக் கட்டமைப்புகளைக் கூடுதலாக ஆராயலாம் எனப் பரிந்துரைக்கிறார்.
“அரசாங்கக் கொள்கைகள் வழி சிங்கப்பூரர்கள் தொடர்ந்து பயனடைய, நிறுவனங்கள் மாறிவரும் சூழலுக்குத் தங்களைத் தகவமைத்து வெற்றி பெறுவதற்கு ஆற்றலளிக்கப்பட வேண்டும்,” என்றார் திரு சக்திவேலன்.

