சிங்கப்பூரில் செயல்முறைத் துறையைச் சேர்ந்த, தொடர்புடைய இரண்டு நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள், தங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படாமலும் வேலை இன்றியும் மிகுந்த மனக்கவலையிலும் எதிர்காலம் குறித்த அச்சத்திலும் தவித்து வருகின்றனர்.
பங்ளாதேஷைச் சேர்ந்த 24 வயது ஊழியரான ஹொசேன் மிதுல், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து கூடுதல் நேர வேலைக்கான சம்பளம் உட்பட தனது $600 சம்பளத்தில் பெரும்பகுதியைத் தவறாமல் சொந்த நாட்டில் உள்ள தமது குடும்பத்துக்கு அனுப்பி வந்துள்ளார்.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவரால் வீட்டிற்குப் பணம் எதுவும் அனுப்ப முடியவில்லை என்று வேதனையுடன் கூறினார். அவரது வேலை அனுமதி அட்டை 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை செல்லுபடியானதாக இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தொடக்கத்தில் எவ்வித விளக்கமுமின்றி அவரது முதலாளி அதனை ரத்து செய்துவிட்டார்.
சிங்கப்பூருக்கு வர முகமை கட்டணத்தைச் செலுத்துவதற்காக வாங்கிய $9,000 வங்கிக் கடனை அடைப்பதற்கே அவரது சம்பளத்தில் பாதி செலவாகிறது. மீதமுள்ள தொகையைக் கொண்டே மேற்கு பப்னா மாவட்டத்தில் உள்ள அவரது ஆறு பேர் கொண்ட குடும்பம் வாழ்ந்து வருகிறது.
இவரைப் போன்று, தொடர்புடைய இரு செயல்முறைத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 240 வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், புரோசஸ் மெயின்டேனன்ஸ் சொல்யூஷன்ஸ் , ஜூரோங் டெக்னிக்கல் அண்ட் கன்ஸ்டிரக்ஷன் ஆகிய இரு நிறுவனங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சு அக்டோபர் மாதம் 24ஆம் தேதியன்று அன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
ஊழியர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்கத் தவறினால், மலேசியரல்லாத ஒவ்வொரு வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவருக்கும் முதலாளிகள் கட்டாயமாகச் செலுத்த வேண்டிய $5,000 உத்தரவாதத் தொகையை அரசு பறிமுதல் செய்ய நேரிடும்.
இதற்கிடையே, அக்டோபர் மாதம் 23ஆம் தேதியன்று சூன் லீ சாலையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மையத்தின் பொழுதுபோக்கு மன்றத்தில், புரோசஸ் மெயின்டேனன்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 70 ஊழியர்கள், அதன் இயக்குநர் ருசைதி மசுனிக்குடனும் மனிதவள அமைச்சு அதிகாரிகளுடனும் ஒரு சந்திப்பை மேற்கொண்டனர். அப்போது நிலுவைச் சம்பளம் கோரிய ஊழியர்களுக்கு, அவர்கள் வேலை செய்த நாள்களையும் கூடுதல் வேலை நேரத்தையும் காட்டும் ஆவணங்களை ருசைதி வழங்கினார். பின்னர் அன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பொருத்தமான மாற்று வேலைவாய்ப்புகளையும் மாற்றத்திற்கான பிற உதவிகளையும் வழங்குவது குறித்து வேலைவாய்ப்பு முகமைப் பங்காளிகளுடன் இணைந்து செயலாற்றி வருவதாக வெளிநாட்டு ஊழியர் மையம் தெரிவித்தது.
