புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள இரட்சண்ய சேனை (The Salvation Army) வளாகச் சுவரிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் மீதும் கிறுக்கல்கள் காணப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள 43 வயதுப் பெண்மீது சனிக்கிழமை (டிசம்பர் 27) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று கைது செய்யப்பட்ட சீன-ஆஸ்திரேலியரான அவரது பெயர், டயானா ஓங். அவர் மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று காவல்துறை கூறியது.
எண் 500 அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்துள்ள இரட்சண்ய சேனை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேன்கள் மீதும் அவ்வளாகத்தின் சுவர்களிலும் கிறுக்கல்கள் காணப்பட்டது தொடர்பில், சொத்துகளைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுகளை அந்தப் பெண் எதிர்கொள்கிறார்.
தெளிக்கக்கூடிய வகையிலான சிவப்பு நிறச் சாயத்தைக் கொண்டு வளாகச் சுவரிலும் அங்கு நிறுத்தப்பட்ட வேன்கள் உள்ளிட்டவற்றிலும் கிறுக்கப்பட்டிருந்தது.
கிறுக்கப்பட்ட சொற்கள் சமய உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியவை என்று கூறிய சிங்கப்பூர் இரட்சண்ய சேனை, அந்தச் சொற்களை வெளியிட மறுத்துவிட்டது நினைவுகூரத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையின்போது காவல்துறை கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டனர்.
புகாரின் பேரில் ஐந்து மணி நேரத்திற்குள் ஜூரோங் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் டயானா ஓங்கைக் கைது செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது போன்ற செயல்களை மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், இத்தகைய குற்றச்செயல்கள் புரிவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஓங்கின் வழக்கு ஜனவரி 9ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கிறுக்கல் தொடர்பான நாசவேலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு $2,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
இதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மூன்று முதல் எட்டு பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம். சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் பெண்களுக்குப் பிரம்படி விதிக்கப்படுவதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

