ஈசூனில் மெல்லிழைத்தாள் விற்று வந்த உடற்குறையுள்ள ஆடவர் ஒருவர், செப்டம்பர் 13ஆம் தேதி காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த ஆடவர் மீது பரிதாபம் கொண்ட மாது ஒருவர், அவருக்கு உதவ காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால், அந்த ஆடவர் அந்த இடத்திலிருந்து காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட நேரிட்டது.
இந்நிலையில், வெளிநாட்டவரான அந்த ஆடவர், செப்டம்பர் 14ஆம் தேதி தம் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதையும் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதையும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
அந்த ஆடவருக்கு இடது கை இல்லை, பாதி வலது கை மட்டுமே இருந்தது. புளோக் 846 ஈசூன் ரிங் ரோட்டில் உள்ள கடைகளின் வரிசைக்குப் பக்கத்தில் அவர் அமர்ந்திருந்தார்.
அந்த ஆடவரைக் கண்ட ஷின் மின் சீன நாளிதழ் வாசகர் ஒருவர், இதுகுறித்து பொதுமக்களில் ஒருவருடன் பேசியதைத் தொடர்ந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவரின் உடைமைகளைக் காவல்துறையினர் தேடிப் பார்த்ததில், அவரிடம் வெளிநாட்டுக் கடப்பிதழ் இருந்தது கண்டறியப்பட்டது.
தம்மை காவல்துறையினர் அணுகியபோது அவர் அமைதியாகப் பேசியதாக அருகில் கடை வைத்திருப்பவர் ஒருவர் ஷின் மின் செய்தியாளரிடம் கூறினார்.
“கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அந்த ஆடவர் அப்பகுதியில் காணப்பட்டார். அவர் எவருடனும் பேசவில்லை,” எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அந்தக் கடைக்காரர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“அந்த ஆடவரின் நிலையைக் கண்டு பரிதாபம் கொண்ட சிலர், மெல்லிழைத்தாள்களை வாங்காமல் அவரிடம் பணம் கொடுத்துவிட்டுச் சென்றனர். ஒருவர் அவரிடம் $50 தாளை நீட்டினார்,” என்று அக்கடைக்காரர் விவரித்தார்.
இதற்கிடையே, ஈசூனில் உடற்குறையுள்ளோர் மெல்லிழைத்தாள்கள் விற்பதைக் குடியிருப்பாளர்கள் கண்டு வருவதாக ஷின் மின் கூறியது. அப்பகுதியில் ‘வெளிநாட்டவர்கள்’ பிச்சை எடுப்பது குறித்து அவர்கள் கவலை கொள்வதாகவும் அந்நாளிதழ் குறிப்பிட்டது.
கடந்த ஒருமாத காலமாக, தாம் வசிக்கும் புளோக்கிற்கு அருகே உடற்குறையுள்ளவர்கள் சிலர் மெல்லிழைத்தாள் விற்பதை தாம் கண்டதாக குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். வாரயிறுதிகளில் காலை 6, 7 மணிக்கெல்லாம் அவர்கள் அங்கு வந்துவிடுவதாக அவர் சொன்னார்.
“அவர்கள் குற்றவியல் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. அது உண்மையென்றால், இங்குள்ள அனுதாபம் கொண்டவர்களை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அது மிகவும் தவறு,” என்றார் அக்குடியிருப்பாளர்.
வெளிநாட்டவர் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படலாம்
பிச்சை எடுக்கும் வெளிநாட்டவர்கள் ‘அனுமதி பெறப்படாத குடியேறி’களாகக் கருதப்படுகின்றனர். தங்கள் சொந்த நாட்டிற்கு அவர்கள் திருப்பி அனுப்பப்படலாம்.
சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வர முடியாது என்கிறது குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்.
அடுத்தடுத்த முறை சிங்கப்பூர் வர, குடிநுழைவுக் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து அவர்கள் அனுமதி பெற வேண்டும்.