தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ளத்தனமாக $1.3 மில்லியனைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற வெளிநாட்டவர்

2 mins read
ea96ec93-f575-45f1-95dd-7dd4f0099466
கள்ளத்தனமாக எடுத்துவர முயன்றதாகக் கூறி பறிமுதல் செய்யப்பட்ட பணம். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

சிங்கப்பூருக்குள் கள்ளத்தனமாக $1.3 மில்லியன் பணத்தைக் கொண்டுவர முயன்ற 49 வயது ஆடவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் 27ஆம் தேதி அவர் பிடிபட்டார். பல்வேறு நாடுகளின் பணத்தாள்களைக் கொண்டுவர முயன்ற அந்த ஆடவர் ஒரு வெளிநாட்டுப் பயணி எனத் தெரிவிக்கப்பட்டது.

அறிவிக்காமல் அல்லது துல்லியமான அறிக்கை இல்லாமல் அதிகளவு பணத்தைச் சிங்கப்பூருக்குள் எடுத்துவர முயன்ற எட்டுப் பயணிகளில் அவரும் ஒருவர்.

மற்ற எழுவரும் $21,000 முதல் $38,400 வரையிலான ரொக்கத்துடன் பிடிபட்டனர் என்று காவல்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், சிங்கப்பூர்ச் சுங்கத்துறை, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவை இணைந்து புதன்கிழமையன்று (டிசம்பர் 4) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தன.

நவம்பர் 25 முதல் 29 வரை அந்த அமைப்புகள் சிங்கப்பூர் நில, கடல், வான்வழிச் சோதனைச்சாவடிகளில் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளின்போது அவர்கள் பிடிபட்டனர்.

அந்த ஐந்து நாள்களில் மட்டும் 8,100க்கும் மேற்பட்ட பயணிகளிடமும் 950 வாகனங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். 14,000க்கும் மேற்பட்ட பயண உடைமைகளும் கையில் எடுத்துச்செல்லும் பயணப்பைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சிங்கப்பூருக்கு வரும் அல்லது சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் பயணிகள், 20,000 வெள்ளிக்குமேல் அல்லது அதற்கு நிகரான வெளிநாட்டுப் பணத்தை வைத்திருந்தால், பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் அதுதொடர்பான ‘ரொக்கம் அல்லது கொணர்பவர் செலாவணி முறி (CBNI)’ அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறுவது, ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடும் குற்றங்கள் (ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். அத்தகைய குற்றமிழைப்போருக்கு $50,000 வரை அபராதம், மூவாண்டுகள்வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம். அத்துடன், ரொக்கப் பறிமுதல் ஆணையும் பிறப்பிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்