மின்சிகரெட் புழங்கும் வெளிநாட்டவர் பிடிபட்டால் அவர்களின் அனுமதி அட்டைகள் மீட்டுக்கொள்ளப்படலாம்; அவர்கள் மீண்டும் சிங்கப்பூர் வருவதற்குத் தடைவிதிக்கப்படலாம்.
மின்சிகரெட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மேலும் கடுமையாகின்றன. அவற்றின்கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மின்சிகரெட்டுகளை வைத்திருக்கும் வெளிநாட்டவரிடமிருந்து அவை பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) அறிவித்தனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மறுபடியும் அக்குற்றங்களைப் புரிபவர்கள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சும் உள்துறை அமைச்சும் தெரிவித்தன.
மறுபடியும் குற்றம் புரியும், குறுகிய காலத்துக்கு சிங்கப்பூர் வருவதற்கான அனுமதி அட்டை வைத்திருப்போர் சிங்கப்பூருக்கு வரத் தடைசெய்யப்படக்கூடும்.
எஸ் பாஸ் அட்டை, வேலை அனுமதி அட்டை உள்ளிட்ட நீண்டகாலத்துக்கான அனுமதி அட்டைகளை வைத்திருப்போர் மூன்றாவது முறையாக மின்சிகரெட் வைத்திருக்கும் குற்றம் புரிந்தால் அவர்களின் அனுமதி அட்டை மீட்டுக்கொள்ளப்படலாம்; அவர்கள் நாடுகடத்தப்படலாம், மீண்டும் சிங்கப்பூர் வர முடியாதபடி தடை விதிக்கப்படலாம்.
அதேபோல், கேபோட் என்றழைக்கப்படும் எட்டோமிடேட் உள்ள மின்சிகரெட்டுகளை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் அனுமதி அட்டைகள் மீட்டுக்கொள்ளப்படலாம், நாடுகடத்தப்படலாம், மீண்டும் சிங்கப்பூர் வர தடை விதிக்கப்படலாம்.
மேல்முறையீடுகள் அந்தந்த விவகாரத்துக்கு ஏற்றவாறு கையாளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மின்சிகரெட் பயன்பாடு அதிகரித்திருப்பதைக் கையாள அரசாங்கம் எடுக்கும் கூடுதல் கடுமையான நடவடிக்கைகளில் இவை அடங்கும்.
இதுகுறித்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் கா. சண்முகம், “முதல்முறை குற்றம் புரியும் இளையர்கள், நீண்டகாலத்துக்கான அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டவர் ஆகியோர் சற்று நீக்குப்போக்குடன் கையாளப்படுவர். இரண்டாம் முறை குற்றம் புரிபவர்கள் சிங்கப்பூரிலிருந்து கிளம்பவேண்டியிருக்கும்,” என்று விவரித்தார்.
இதன் தொடர்பில் சாங்கி விமான நிலையத்தில் கூடுதல் அறிவிப்புகளும் மின்சிகரெட்டுகளை எறிவதற்கான தொட்டிகளும் இருக்கும். சாங்கி விமான நிலையம்வழி மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கும் அவை பொருந்தும்.
இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஓங் யி காங், “இனி கூடுதல் அறிவிப்புகளைக் கேட்பீர்கள். போதைப்பொருள் மிகவும் அதிக கவனம் தேவைப்படும் விவகாரமாகும்; ‘சியூயிங் கம்’ அனுமதிக்கப்படுவதில்லை; மின்சிகரெட்டுகளை எறிந்துவிடுங்கள்,” என விளக்கினார். சாங்கி விமான நிலையம்வழி மற்ற நாடுகளுக்குப் போகும் பயணிகள் தங்களிடம் மின்சிகரெட்டுகள் இருப்பதைத் தெரிவித்து அவற்றை சிவப்பு நிற மின்சிகரெட்டுகளுக்கான தொட்டிகளில் எறியலாம் என்று திரு சண்முகம் தெரிவித்தார். மின்சிகரெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் பிடிபட்டால், அவை கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டவையா என்று அதிகாரிகள் ஆராய்வர்.
உள்ளூரில் மின்சிகரெட் புழங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மீதும், பிடிபட்டால் கூடுதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்தார்.

