அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்: இந்தியாவின் வளர்ச்சியால் சிங்கப்பூருக்கு வாய்ப்பு

2 mins read
b0da4dfa-d294-411e-96a4-d7d0dac42efd
(இடமிருந்து) இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சிங்கப்பூர் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, சிங்கப்பூர் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், சிங்கப்பூர் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், இந்தியாவின் நிதி மற்றும் நிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இந்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் - படம்: த.கவி
multi-img1 of 2

இந்தியாவின் பொருளியல் வளர்ச்சியும் உலக அரங்கில் அதிகரித்து வரும் அதன் முக்கியத்துவமும் மதிநுட்பமும் சிங்கப்பூருக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“இந்தியப் பொருளியல் வளர வளர, எங்களது பங்காளித்துவத்தை ஆழப்படுத்தும் ஆற்றலும் வளர்கிறது,” என்று டாக்டர் விவியன் கூறினார்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது அமைச்சர்நிலை வட்ட மேசைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசியபோது டாக்டர் விவியன் இவ்வாறு கூறினார்.

பசுமை, நீடித்த நிலைத்தன்மை சார்ந்த எரிசக்தித் திட்டம், மின்னிலக்க ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, சுகாதாரம், பகுதி மின்கடத்திகள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கும் மேம்பட்ட உற்பத்தித்துறை, இணைப்புத்தன்மை ஆகியவை திங்கட்கிழமை நடைபெற்ற வட்ட மேசைக் கூட்டத்தின் முக்கியத் தூண்களாக விளங்கியதை டாக்டர் விவியன் சுட்டினார்.

அனைத்துலக அளவில் பகுதி மின்கடத்திகளை உற்பத்தி செய்யும் சூழலை வெற்றிகரமாக அமைத்த சிங்கப்பூரிலிருந்து இந்திய கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகக் கூறிய டாக்டர் விவியன், இதில் இரு நாடுகள் ஒத்துழைப்பதற்கு வாய்ப்புகள் பெருகும் சாத்தியம் இருப்பதாகக் கூறினார்.

மின்னிலக்க, நாடுகடந்த கட்டண முறைகளின்வழி சிங்கப்பூரும் இந்தியாவும் தங்கள் பொருளியல் பலத்தை மேம்படுத்தவுள்ளதாக டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

“இருந்தபோதும், பாதுகாப்பான அமைப்புகளும் தெளிவான விதிமுறைகளும் இன்றி, மின்னிலக்க வணிகத்தின் மகத்தான ஆற்றலும் பொருளியல் வளரச்சியும் எட்டப்படமாட்டா,” என்று அவர் எச்சரித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்ற முதல் கூட்டத்திற்கும் திங்கட்கிழமை நடந்த முடிந்த இரண்டாவது கூட்டத்திற்கும் இடையே நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது குறித்து டாக்டர் விவியன் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

சிங்கப்பூரின் ‘பேநவ்’ மின்னிலக்க பணப் பரிவர்த்தனை முறைக்கும் இந்தியாவின் ‘யூபிஐ’ முறைக்கும் இடையே 2023ல் வெற்றிகரமாக இணைப்பு நிறுவப்பட்டதை இந்த முன்னேற்றங்களில் ஒன்றாக அவர் சுட்டினார்.

“‘பேநவ்’வுக்கும் ‘யூபிஐ’க்கும் இடையிலான இந்த இணைப்பு, தொழில்நுட்பச் சாதனை மட்டுமின்றி எங்கள் இருநாட்டு உறவில் ஒரு மைல்கல்,” என்றார் அமைச்சர் விவியன்.

இந்த இணையக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் வட்டமேசைக் கூட்டத்தில் பேசப்பட்டதாக டாக்டர் விவியன் சொன்னார்.

“சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே மட்டுமின்றி, ஆசியான் வட்டார அளவில் உடனடி கட்டண முறையாக உருவெடுக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது,” என்றார் அவர்.

தனிப்பயன் சார்ந்த இணைப்புகளுக்கான தீர்வுகளுக்கு தரப்படுத்தப்பட்ட இடைமுகப்பை (standardized interface) உருவாக்கும் நோக்கத்தையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

“பாதுகாப்பாகவும் செயல்திறனுடனும் புதிய பங்காளிகள் இணையக்கூடிய புதிய கட்டமைப்பை நினைத்துப் பாருங்கள். இதுதான் நம் வட்டாரத்திலுள்ள மின்னலக்க வணிகத்தின் எதிர்காலம். அதற்கு சிங்கப்பூருக்கும் இந்தியாவும் வழிகாட்டுகின்றன,” என்று அவர் சொன்னார்.

ஆயினும், மின்னிலக்கக் கட்டணமுறையின் பயன்பாடு அதிகரிக்க, இணையப் பாதுகாப்பும் விதிமுறைக் கட்டமைப்பும் கூடுதலாக வலுப்படுத்தப்படவேண்டும் என்று டாக்டர் விவியன் வலியுறுத்தினார்.

இணையப் பாதுகாப்பு தெரிவு அன்று, அது அவசியம் என்ற அவர், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே தற்போது நிதிசார்ந்த இணையப் பாதுகாப்பு தரநிலைகள் அமைக்கப்பட்டு வருவதையும் சிறந்த நிர்வாக முறைகள் பகிரப்பட்டு வருவதையும் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்