செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு இடையே ஊழியர்களின் திறனை மேம்படுத்தவும், தொழில் உருமாற்றத்தை ஆதரிக்கவும், வேலைகளை மறுவடிவமைப்பு செய்யவும் ‘வேலைகளுக்கான முத்தரப்பு மன்றம்’ (Tripartite Jobs Council) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி), சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் (எஸ்என்இஎஃப்) ஆகியவை இணைந்து இதனை அறிவித்துள்ளன.
தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கத்திற்கு இடையில் ஊழியர்களையும் நிறுவனங்களையும் ஆதரிக்க முற்படும் இந்த மன்றம், முத்தரப்புக் கடப்பாட்டைப் பிரதிபலிப்பதாக என்டியுசி வியாழக்கிழமை (ஏப்ரல் 30) வெளியிட்ட முத்தரப்புக் கூட்டறிக்கை குறிப்பிடுகிறது.
செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைக் கையாள்வதற்காக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசரத் தேவையை முத்தரப்புப் பங்காளிகள் ஒப்புக்கொள்வதை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
“என்டியுசியால் தொடங்கப்பட்ட இந்த முத்தரப்பு மன்றம், ஒவ்வொரு பங்காளியின் முயற்சிகளையும் திட்டங்களையும் ஆதரித்து வளப்படுத்துவதுடன் சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு நோக்கத்தை முன்னெடுக்க தேசியச் செயற்கை நுண்ணறிவு மன்றத்தின்கீழ் (National AI Council) மேற்கொள்ளப்படும் அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவு நல்கும்,” என்று கூட்டறிக்கை தெரிவித்தது.
செயற்கை நுண்ணறிவு ஏற்றுக்கொள்ளப்படும் வேளையில், தொழில்துறை ஊழியரணி உருமாற்றத்திற்கான ஒருங்கிணைந்த ஆதரவு, ஊழியர்களுக்கான பரந்த அடிப்படையிலான பயிற்சி, துறை அடிப்படையிலான பயிற்சி போன்றவற்றுக்கு முத்தரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்.
அத்துடன், அபாயங்களை எதிர்நோக்கும் துறைகளிலும் தொழில்களிலும் உள்ள ஊழியர்கள் வேலை மாறுவதற்கான ஆதரவு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வு ஆகியவற்றை அதிகரிக்கவும் இந்த மன்றம் முற்படும்.
இதன் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங், செயற்கை நுண்ணறிவின் செயலாற்றலைச் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளாக மாற்றும் நமது ஒட்டுமொத்தக் கடப்பாட்டை வேலைகளுக்கான முத்தரப்பு மன்றம் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நமது தொழிற்சங்கங்கள், முதலாளிகள், அரசாங்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் ஆற்றலையும் பயன்படுத்தி, ஒவ்வோர் ஊழியரும் தங்களது செயல்திறனை முழுமைப்படுத்த நாங்கள் உதவுவோம். ஒவ்வொரு நிறுவனமும் தனது ஊழியரின் ஆற்றலைச் சிறந்த நிலைக்கு உயர்த்தி, அந்த நிறுவனங்கள் வளரும் நிலைக்கு நாங்கள் இட்டுச் செல்வோம்,” என்று அவர் கூறினார்.
ஊழியரணி செயலாற்றும் முறையைச் செயற்கை நுண்ணறிவு மாற்றுவதாக என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
“நாம் பணியாற்றும் முறையைச் செயற்கை நுண்ணறிவு மாற்றுகிறது. நம் ஊழியர்கள் பின்தங்கிவிடக்கூடாது என்பது முக்கியம். வேலைகளுக்கான முத்தரப்பு மன்றம், முத்தரப்பு ஆற்றல்களை ஒரே கூரையின்கீழ் ஒன்றுதிரட்டும். இளையர்கள், நிபுணர்கள், நிர்வாகிகள் உட்பட அனைத்து வகை ஊழியர்களுடனும் துணைநிற்கும் நமது உறுதியான கடப்பாடே இந்த மன்றம்,” என்றார் திரு இங்.

