தெம்பனிசில் புதிய குடியிருப்புத் திட்டம்; 300 வீவக வீடுகள் கட்டப்படலாம்

2 mins read
6cca183c-54f8-4756-a6fd-b3872b0c8053
தெம்பனிஸ் ஸ்திரீட் 22ல் முன்னாள் அங்சானா தொடக்கப் பள்ளி இருந்த இடத்தில் இப்புதிய குடியிருப்புப் பகுதி அமைய உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தெம்பனிஸ் வட்டாரத்தில் புதிய குடியிருப்புத் திட்டம் வரவுள்ளது.

தெம்பனிஸ் ஸ்திரீட் 22ல் முன்னாள் அங்சானா தொடக்கப் பள்ளி இருந்த இடத்தில் இப்புதிய குடியிருப்புப் பகுதி அமைய உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 300 வீடுகளைக் கட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.

நகர மறுசீரமைப்பு ஆணையம் தனது பெருந்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தத்தின்படி, அந்த 1.8 ஹெக்டர், ஏறத்தாழ மூன்று காற்பந்துத் திடல் அளவு உள்ள அந்த நிலப்பகுதி, கல்வி நிலையப் பகுதி என்பதிலிருந்து வீடமைப்புப் பகுதியாக வரையப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, அங்கு தற்பொழுது வசிப்போர், வருங்கால குடியிருப்பாளர்கள் ஆகியோர் பயன்பெறக்கூடிய வகையில் சமுதாய, சமூக வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்படும் என்று ஆணையம் விளக்கியுள்ளது.

ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ள வரைபடத்தில் அப்பகுதியிலுள்ள கட்டடத்தை இடிக்க 2023ஆம் ஆண்டு மே மாதம் வீவக அனுமதி அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் உள்ள நிலப்பரப்பில் 270லிருந்து 350 வீடுகள்வரை கட்டலாம் என சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

சாங்கி விமான நிலையம், சாங்கி வணிகப் பூங்கா போன்ற வேலையிடப் பகுதிகளுக்கு அருகில் இருப்பதால் தெம்பனிஸ் வட்டார வீடுகளுக்கு என்றுமே அதிக வரவேற்பு இருப்பதாக இஆர்ஏ சொத்துச் சந்தை முகவையைச் சேர்ந்த திரு யூஜின் லிம் கூறுகிறார்.

“தெம்பனிஸ் வடக்கு, மேற்குப் பகுதிகளில் 2019ஆம் ஆண்டிலிருந்து 5,985 தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதைப்போல் அல்லாமல் இந்த இடத்தில் கட்டப்படவுள்ள வீடுகள் வீட்டு எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தாது,” என்று திரு யூஜின் கூறினார்.

கடந்த அக்டோபர் மாத வீட்டு விற்பனைக்குப் பிறகு அதிக வரவேற்புள்ள வட்டாரங்களில் கட்டப்படும் வீடுகள் முதன்மை, பிளஸ் வகை வீட்டுப் பிரிவுகளின்கீழ் வரும். இந்த வீடுகளில் குறைந்தபட்ச குடியிருப்புக் காலம் 10 ஆண்டுகள், வீட்டு விற்பனையின்போது குறிப்பிட்ட தொகையை கழகத்துக்கு திருப்பித் தருவது போன்ற கடுமையான நிபந்தனைகளுடன் வரும். மாறாக, வழக்கமான வீவக வீடுகள் ஐந்து ஆண்டு குறைந்தபட்ச குடியிருப்புக் காலத்தைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்