செம்ப்கார்ப் மரின் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வோங் வெங் சன், ஜூரோங் ஷிப்யார்ட் நிறுவனத்தின் முன்னாள் மூத்த பொது மேலாளர் லீ ஃபூக் காங் இருவரும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரேசிலில் உள்ள செம்ப்கார்ப் மரின் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்பில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளை வோங்கும் லீயும் எதிர்கொண்டிருந்தனர்.
வழக்கு தொடர்பில் அவர்கள் இருவருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்க அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவெடுத்ததை அடுத்து அவர்கள்மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
கையூட்டு விவகாரத்தின் தொடர்பில் பிரேசிலிய முகவரான கிலெர்மி எஸ்தேவீஸ் டீ ஜேசுஸ்மீது பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் விசாரணை ரத்துசெய்யப்பட்டதும் கருத்தில் கொள்ளப்பட்டது.
வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களை அடுத்து அரசாங்க நீதிமன்றங்கள் வோங், லீ இருவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தனர்.
சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு இம்மாதம் 21ஆம் தேதி வோங்கிற்கும் லீக்குமான கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தன.
லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வோங், ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். நீதிக்குத் தடையாக இருந்த மேலும் ஒரு குற்றச்சாட்டு அவர்மீது சுமத்தப்பட்டிருந்தது. வழக்குத் தொடர்பில் லீ மீதும் அதே ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
செம்ப்கார்ப் மரின் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய வோங், திட்டப் பொறியாளர் பதவியிலிருந்து தலைவராக, தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்வு பெற்றார். அவர் குற்றச் செயலில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து கூறிவந்தார்.
2009ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்கள் தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகள் வோங்மீது சுமத்தப்பட்டன.
பிரேசிலிய அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசுக்குச் சொந்தமான பெட்ரோபிராஸ் எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக திட்டமிடப்பட்ட தொகைகளும் அதில் அடங்கும்.
