‘வயர்கார்டு’ நிறுவனத்தின் ஆசிய வட்டாரத்திற்கான முன்னாள் இயக்குநர் பிரிஜிட் ஹவுசர்-ஆக்ஸ்ட்னர் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டார்.
ஜெர்மனியில் நிதித் தொழில்நுட்பம், கட்டணச் சேவை வழங்கிய நிறுவனம் அது.
மோசடிக் கும்பல்களுடன் தொடர்பில் இருப்போருக்கான உலகளாவிய தேடுதலின்போது, அவர் பிடிப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெர்மனியில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட அவரைச் சிங்கப்பூர்க் காவல்துறை கைதுசெய்தது.
மூன்று பெரிய மோசடிகளிலும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் மோசடிகளில் ஈடுபடும் கும்பலுடனும் அவருக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
ஜெர்மனியில் இருக்கும் நான்கு முக்கிய கட்டணச் சேவை வழங்கும் நிறுவனங்களை மோசடிச் சம்பவங்கள் தொடர்புடைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மோசடிக்காரர்கள் பயன்படுத்தியதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட அமலாக்கப் பிரிவான ‘யூரோபோல்’ கூறியது.
அந்நிறுவனங்களின் பெயர்களை அது குறிப்பிடவில்லை என்றாலும், ஜெர்மன் புலனாய்வு செய்தி நிறுவனமான ‘டெர் ஸ்பீகல்’ அவற்றில் ஒன்றாக ‘வயர்கார்ட்’ நிறுவனம் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்கீழ், ஜெர்மன் அதிகாரிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ஜெர்மன் நாட்டவரான பிரிஜிட் ஹவுசர்-ஆக்ஸ்ட்னரைக் கைது செய்ததாகச் சிங்கப்பூர்க் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டில் ஒரு குற்றக் கும்பலை உருவாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, கணினி மோசடி, ஜெர்மனியின் அதிகார வரம்பிற்குள் செய்யப்பட்ட பணமோசடி குற்றங்கள் ஆகியவற்றிற்காக அந்த ஜெர்மன் நாட்டவரை அந்நாட்டு அதிகாரிகள் தேடியதாகச் சொல்லப்படுகிறது.
காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் சிங்கப்பூரில் எந்தக் குற்றமும் செய்யவில்லை.
ஜெர்மன் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதால், கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க இயலாது எனச் சிங்கப்பூர்க் காவல்துறை கூறியது.

