மருத்துவமனை பரிசோதனை அறையில் பெண் நோயாளி ஒருவரை மானபங்கம் செய்த முன்னாள் மருத்துவருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 27) விதிக்கப்பட்டது.
பெருங்குடல், மலக்குடலின் உட்புறத்தை ஆராய்வதற்காக ‘கொலோனோஸ்கோப்’ எனும் செய்முறை மூலம் பாதிக்கப்பட்ட மாதுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மூல நோயைக் கண்டறிவதற்காக அப்பரிசோதனை நடத்தப்படுகிறது.
அந்நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் அந்த மாதை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாதின் அடையாளங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, சிங்கப்பூரரான அந்த மருத்துவரின் பெயரையும் மருத்துவமனையின் பெயரையும் நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
குற்றம் நடந்தபோது அந்த மாதின் வயது 20. மருத்துவரின் வயது 72.
‘புரோஸ்டேட்’ புற்றுநோயால் அந்த மருத்துவர் பாதிக்கப்பட்டுள்ளதால், தண்டனைக் காலம் ஒரு வாரமாகக் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, தனியார் மருத்துவமனை ஒன்றில் அச்சம்பவம் நடந்தது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவத்தன்று பரிசோதனைக்குப் பிறகு மயக்க நிலையில் இருந்த அந்த மாதின் மார்புப் பகுதியைப் பரிசோதனை என்ற போர்வையில் அந்த மருத்துவர் தொட்டதாகக் கூறப்படுகிறது.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு தாதிகள், உடனடியாக தங்கள் மேற்பார்வையாளர்களிடம் அதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

